காதல் விவகாரம்: திருமணம் முடிந்த 4 நாட்களில் கணவரை தீர்த்து கட்டிய மனைவி

பாயலின் விருப்பத்திற்கு எதிராக அவருடைய குடும்பத்தினர், பவிக்கிற்கு திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில், கணவரை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.

Update: 2024-12-17 14:40 GMT

காந்தி நகர்,

குஜராத்தின் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பாயல். இவருக்கு ஆமதாபாத் நகரை சேர்ந்த பவிக் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு, பெற்றோர் வீட்டில் இருந்த மனைவி பாயலை அழைத்து வருவதற்காக பவிக் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால், நீண்டநேரம் சென்றும் அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை. இதனால், சந்தேகமடைந்த பாயலின் தந்தை, பவிக்கின் தந்தையை தொடர்பு கொண்டு, உங்களுடைய மகன் வீட்டுக்கு வரவில்லை என கூறியிருக்கிறார். இதற்கு பவிக்கின் தந்தை, பவிக் புறப்பட்டு சென்று பல மணிநேரம் ஆகி விட்டது என கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து, பாயலின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் பவிக்கை தேடி சென்றனர். அப்போது, சாலையில் 2 சக்கர வாகனம் ஒன்று கேட்பாரின்றி கிடந்துள்ளது. அந்த பகுதியில் இருந்தவர்கள் கூறும்போது, 3 பேர் காரில் வந்து, வாகனத்தில் வந்த நபரை கடத்தி சென்றனர் என கூறினர்.

இதுபற்றி பாயலின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். திருமணம் நடந்த 4 நாட்களில் பவிக் கடத்தப்பட்டது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியது. இதனால், பாயலிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

பாயல், திருமணத்திற்கு முன்பே உறவினரான கல்பேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், பாயலின் விருப்பத்திற்கு எதிராக அவருடைய குடும்பத்தினர், பவிக்கிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால், கணவரை தீர்த்து கட்டுவது என பாயல் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, பாயலை அழைத்து செல்ல பவிக் வரும்போது, அவரின் இருப்பிடம் பற்றி வழியில் கேட்டு தெரிந்து கொண்ட பாயல் அதனை கல்பேஷிடம் பகிர்ந்திருக்கிறார். இதன்பின்னர் கல்பேஷ், கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு சொகுசு ரக காரில் வந்து பவிக்கின் வாகனம் மீது மோதியுள்ளார். பவிக் கீழே விழுந்ததும், அவரை காரில் கடத்தி சென்று, கொலை செய்துள்ளனர். பவிக்கின் உடலை நர்மதா கால்வாயில் வீசி விட்டு சென்றனர்.

இந்த விவகாரத்தில், பாயலை போலீசார் காவலில் எடுத்துள்ளனர். கல்பேஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்