ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா வாக்கெடுப்பு: பங்கேற்காத கட்சி எம்.பி.,க்களுக்கு பாஜக நோட்டீஸ்
மக்களவைக்கு வராத 20க்கும் மேற்பட்ட பாஜக எம்.பி.க்களுக்கு அக்கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டது.இதன்படி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் அறிக்கையின்படி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை (டிச. 12) ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறைக்கான இரு மசோதாக்களை மக்களவையில் சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இன்று(டிச.17) தாக்கல் செய்தார். மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதாவும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதேநேரத்தில் தேர்தல் நடத்த 2-வது மசோதாவும் வழிவகை செய்யும்.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல், திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. இதனைத் தொடர்ந்து, மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 269 பேர் ஆதரவாகவும் 198 பேர் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதாக சட்டத்துறை மந்திரி அறிவித்தார்.
இந்தநிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா வாக்கெடுப்பின்போது மக்களவையில் கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட பாஜக எம்.பிக்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. வாக்கெடுப்புக்கு முன்னதாக அனைத்து எம்.பி.க்களிடமும் கட்டாயம் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த உத்தரவின்படி அனைத்து எம்.பிக்களும் கட்டாயம் அவையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் 20க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் அவையில் இல்லாதது பாஜக தலைமையை அதிருப்தி அடைய செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பல்வேறு எம்.பி.க்கள் தனிப்பட்ட மற்றும் வேலை காரணங்களால் தாங்கள் இல்லாதது குறித்து முன்கூட்டையே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் அவையில் இல்லாதற்கான காரணங்கள் குறித்து நிச்சயமாக ஆராய்ந்து வருகிறோம். இது குறித்து அவர்களுக்கு கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் உட்பட சில எம்.பி.க்கள் ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்ததாக அக்கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.