ஊழல் செய்பவர்களை தலைகீழாக தொங்க விடுவோம்: அமித்ஷா பேச்சு
1 ரூபாயில் பெண்களுக்கான சொத்து பதிவு மேற்கொள்ளப்படும் என ஜார்கண்டில் பொது கூட்டத்தில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஜாரியா பகுதியில் இன்று பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ஊழல் மற்றும் நிலக்கரி கடத்தல் ஆகியவற்றுக்காக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியை கடுமையாக சாடினார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், நிலக்கரி கடத்தல் தடுத்து நிறுத்தப்படும். வர்த்தகர்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ஜார்கண்டில் பா.ஜ.க. ஆட்சியமைத்ததும், பொதுமக்களின் நிதியை கொள்ளையடித்த ஊழல் தலைவர்கள் ஒருவரையும் தப்பிக்க விடமாட்டோம். அவர்கள் நேராவதற்காக, அவர்களை தலைகீழாக தொங்கவிடுவோம் என்றார்.
1 ரூபாயில் பெண்களுக்கான சொத்து பதிவு மேற்கொள்ளப்படும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பெண்கள் லட்சாதிபதியாவதோ அல்லது ஊழல் தலைவர்கள் தங்களுடைய கஜானாவை நிரப்பி கொள்வதோ எதுவானாலும், உங்களுடைய ஒரு வாக்கே, ஜார்கண்டின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் என்று பேசியுள்ளார்.