பிரிட்ஜ், டிவி, 4 பேனுக்கு ரூ.20 லட்சம் மின் கட்டணம்..? அதிர்ந்த குடும்பத்தினர்
பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணின் வீட்டிற்கு ரூ.20 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
காந்திநகர்,
குஜராத் மாநிலம் நவ்சாரியில் ஒரு வீட்டிற்கு ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20 லட்சம் விதிக்கப்பட்டது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பங்க்திபென் படேல் என்ற பெண்ணின் வீட்டிற்குதான் ரூ.20 லட்சம் மின் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பங்க்திபென் கூறும்போது, "எங்கள் வீட்டில் 4 பேர் உள்ளோம். வழக்கமாக எங்கள் வீட்டிற்கு இரண்டு மாத மின் கட்டணமாக ரூ.2 ஆயிரம் முதல் 2,500 வரை விதிக்கப்பட்டும். எங்கள் வீட்டில் குறைந்த அளவே மின் சாதனங்கள் உள்ளன. 4 மின் விளக்குகள், 4 மின் விசிறிகள், ஒரு குளிர்சாதன பெட்டி மற்றும் ஒரு டிவி உள்ளது.
இந்த முறை ஜூன்-ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.20,01,902 விதிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறினார். இந்த நிலையில் இது தொடர்பாக பங்க்திபென் குடும்பத்தினர், குஜராத் மின்சார வாரியத்தை (GEB) தொடர்பு கொண்டபோது, அவர்கள் புகார் பதிவு செய்யுமாறு கூறினர்.
பின்னர் மின்வாரிய அதிகாரி இது தொடர்பாக மதிப்பாய்வு செய்தபோது, மின் மீட்டரில், பயன்படுத்திய மின்சாரத்தின் அளவு தவறாக கணக்கெடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒரு மணி நேரத்தில் மின் கட்டணம் சரிசெய்யப்பட்டது. இதன் மூலம் பங்க்திபென் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.