விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சத்தீஷ்காரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீஸ் சம்மன்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக சத்தீஷ்காரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Update: 2024-10-16 05:05 GMT

மும்பை,

கடந்த 14-ந்தேதி(திங்கள்கிழமை) மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு மர்ம நபர்கள் 'எக்ஸ்' வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதேபோல், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் போலியானவை என்பது அதிகாரிகளின் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில், சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள ராஜ்னந்த்கான் பகுதியில் இருந்து 'எக்ஸ்' தளத்தில் மிரட்டல் பதிவு வெளியிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சத்தீஷ்கார் மாநிலத்திற்கு விரைந்த மும்பை போலீசார், ராஜ்னந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை ஆகிய இருவருக்கு சம்மன் அனுப்பினர். அந்த சிறுவனின் தந்தையுடைய 'எக்ஸ்' வலைதள கணக்கில் இருந்துதான் மிரட்டல் பதிவு வெளியாகி இருப்பதாகவும், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக மும்பை வருமாறு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்