இரு இடங்களில் ஒரே நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-19 05:07 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வங்கக்கடலில் கடந்த 14ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து சென்னைக்கு அருகே வடக்கே எண்ணூரையொட்டி கடந்த 17-ம் தேதி கரையை கடந்தது.

இந்நிலையில், அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்திலும், வங்கக் கடலில் வரும் 22-ம் தேதியும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். வங்கக்கடலில் 22-ந்தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 24-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வங்கக் கடலில் வரும் 22ஆம் தேதி உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். ஆனால் புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து தகவல் இப்போது இல்லை. ஒருவேளை புயலாக வலுப்பெறும் பட்சத்தில் வடக்கு நோக்கி செல்லும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே இருக்கும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்