காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை..?
காலை 10 மணி வரை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக வருகிற 23-ந் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.