திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை

சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-08-09 14:15 GMT

டெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு டெல்லி மாநிலத்திற்கு புதிய மதுபான கொள்கை கொண்டு வந்தது. இந்த மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அப்போதைய மாநில கவர்னர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேலும் மதுபான கொள்கையில் 100 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்குகளில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.ஏ. கவிதா உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, டெல்லி துணை முதல்-மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, மதுபான கொள்கை வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டு, டெல்லி ஐகோர்ட்டு, டெல்லி கீழமை கோர்ட்டுகளில் பலமுறை வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வந்தது.

இதனிடையே, 17 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணீஷ் சிசோடியா தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் 3வது முறையாக மனு தாக்கல் செய்தார். அமலாக்கத்துறை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிஆர் கவய், விகே விஷ்வநாதன் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கினர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 17 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணீஷ் சிசோடியா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்