சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி

மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்துச்சிதறியதில் 2 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

Update: 2024-10-19 13:18 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் பரவலாக பல இடங்களில் காணப்படுகிறது. அவ்வப்போது வன பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்து, அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர் மீது தாக்குதல்களும் நடத்தப்படுவதுண்டு. இதில், பொதுமக்களும் சில சமயங்களில் இலக்காவதுண்டு.

இந்த நிலையில், எல்லை பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் அடங்கிய குழுவானது மாநிலத்தின் துபேடா பகுதியில் இருந்து நாராயணன்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அபுஜ்மத் பகுதியில் உள்ள கொட்லியார் கிராமத்திற்கு அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் திடீரென வெடித்துச்சிதறியது.

இதில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் மராட்டியம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்