'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர்' - உ.பி. கவர்னர் பேச்சு

'விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத முனிவர் பரத்வாஜர் என்று உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-11-19 11:21 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில், அந்த மாநிலத்தின் கவர்னர் ஆனந்திபென் பட்டேல் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நமது முன்னோர்கள் செய்த ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு பண்டைய இந்திய நூல்களை மாணவர்கள் படிக்க வேண்டும். தற்போது வரை உலகிற்கு நன்மை தந்து கொண்டிருக்கும் பல கண்டுபிடிப்புகளை பண்டைய இந்தியாவில் வாழ்ந்த நமது முனிவர்கள் மற்றும் அறிஞர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

விமானத்தை முதன்முதலில் வடிவமைத்தவர் வேத கால முனிவர் பரத்வாஜர் ஆவார். ஆனால் அந்த பெருமை வேறொரு நாட்டிற்கு வழங்கப்பட்டது. அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கால நூல்கள் ஞானத்தின் பொக்கிஷமாகும். அவற்றை படிக்க மாணவர்களை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

புத்தரின் பூமியான இந்தியா, எப்போதும் போரை விட அமைதியின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இந்தியா புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 140 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியா, பிரதமர் மோடியால் திறமையாக வழிநடத்தப்படுகிறது. அவருடைய கொள்கைகள் உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளன."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்