மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

Update: 2024-10-16 10:40 GMT

புதுடெல்லி:

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலை நிவாரணம் கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இப்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 50 சதவீதம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது. தற்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது 01.07.2024 முதல் நடைமுறைக்கு வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரண உயர்வால் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,448.35 கோடி கூடுதல் செலவாகும்.

மேலும் 2025-26 மார்க்கெட்டிங் சீசனுக்கான அனைத்து ரபி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.) உயர்த்தி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்