வங்காளதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க உள்ளது.

Update: 2024-08-08 01:54 GMT

கோப்புப்படம்

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்படுவதாக அதிபர் அறிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் சென்றுள்ள முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை ஏற்க விரைவில் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார். இதனிடையே, எல்லா வகையான வன்முறைகளில் இருந்தும் விலகி இருக்கவும், அமைதியை கடைப்பிடிக்கவும் போராட்டக்காரர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் முகமது யூனுஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக தலைநகர் டாக்காவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான், "நாளை (இன்று) பதவியேற்பு விழாவை நடத்த முழு முயற்சி எடுத்து வருகிறோம். பிற்பகலில் நடத்த முன்மொழியப்பட்டது. ஆனால் முகமது யூனுஸ் மதியம் 2:10 மணியளவில்தான் நாட்டிற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால அரசின் ஆலோசனை குழுவில் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இடைக்கால அரசின் தலைவரான பேராசிரியர் முகமது யூனுசுக்கு ஆயுதப்படைகள் அனைத்து ஆதரவையும் வழங்கும்" என்று தெரிவித்தார்.

போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்வு

ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி 2 நாட்கள் ஆன பிறகும் அங்கு போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டம் நின்றபாடில்லை. அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து கொடூர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் ஆளுங்கட்சியின் பிரமுகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என 29 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 2 நாட்களில் 400-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினர். இந்த வன்முறையில் சுமார் 50 போலீசார் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்