அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை பேச்சு: கொந்தளித்த கெஜ்ரிவால்
அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியது தொடர்பாக பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு கெஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.
புதுடெல்லி,
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் , ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, தி.மு.க .எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து கையில் அம்பேத்கர் புகைப்படம் ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மேலும், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'ஜெய் பீம்' என முழக்கமிட்டனர். இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. நாடு முழுவதும் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா தன்னுடைய பேச்சு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து திரித்து சிலர் குறை சொல்கிறார்கள். மோடியின் அரசாங்கம்தான் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதை கொள்கையாக வைத்திருக்கிறது. அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். அம்பேத்கரை பற்றி நேரு குறை கூறி இருக்கிறார். காங்கிரஸ்தான் இரண்டு முறை அம்பேத்கரை தோல்வி அடையச் செய்தது. ஆனால் அம்பேத்கரின் வரலாற்று புகழை உலக நாடுகள் முழுவதும் கொண்டு சென்றது பா.ஜ.க. அரசுதான். அம்பேத்கர் குறித்து எனது முழு பேச்சையும் கேட்க வேண்டும்" என்று அமித் ஷா விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் முதல்-மந்திரி அதிஷி, மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "அமித்ஷாவின் பேச்சு அம்பேத்கருக்கு கடுமையான அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஒரு வகையில் அம்பேத்கரை கேலி செய்தார். அமித்ஷாவின் கருத்து நாட்டிலுள்ள கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளது. அதே வேளையில் பிரதமர் மோடி அமித்ஷாவை ஆதரித்த விதம், அவர் நாடாளுமன்றத்தில் பேசியது பா.ஜனதாவின் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று தெரிகிறது. அமித்ஷா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதனால் மக்களின் கோபம் முற்றிலும் மறைந்துவிடாது என்றாலும் குறையும்.
இந்த விஷயத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்வோம், பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைமை அம்பேத்கரை எப்படி அவமதித்துள்ளது என்பதை அம்பலப்படுத்துவோம். டெல்லியிலும், நாடு முழுவதிலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியை பா.ஜ.க. எப்படி அவமதிக்கிறது என்பதை மக்கள் அறிந்திருப்பதை உறுதி செய்வோம். இந்தக் கருத்துகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் உணரும் வலியில் பங்கு கொள்கிறோம்" என்று அவர் கூறினார்.