ஆம்ஸ்ட்ராங் கொலை: 10 மாதத்துக்கு முன் இறந்தவரை தொடர்புபடுத்தி வீடியோ - குடும்பத்தினர் அதிர்ச்சி

திருவேங்கடம் என்ற பெயருடன் உள்ளவரை தொடர்புபடுத்தி வீடியோ வெளியானதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

Update: 2024-07-23 23:04 GMT

10 மாதத்திற்கு முன் இறந்து போன திருவேங்கடம்

வேலூர்,

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 11-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவுடியான திருவேங்கடம் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக கடந்த 14-ந் தேதி மாதவரம் பகுதிக்கு அழைத்துச்சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டதில் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார் சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் சொந்த ஊர், குடும்பம் பற்றி இதுவரை போலீசார் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள கீரைசாத்து கிராமத்தில் திருவேங்கடம் (44) என்பவர் உடல்நலக்குறைவால் 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்த நிலையில் என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடமும் கீரைசாத்து பகுதியை சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியுள்ளது. அவ்வாறு பரவிய வீடியோவில், சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்தின் தந்தை பெயரும், மனைவி பெயரும் 10 மாதங்களுக்கு முன்பு இறந்த திருவேங்கடத்தின் தந்தை பெயரும், மனைவி பெயரும் ஒன்றாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் உடல்நலக்குறைவால் இறந்தவரை ரவுடிபோல் சித்தரித்து வேண்டுமென்றே வீடியோவை பரவவிட்டுள்ளதாக, கீரைசாத்து கிராமத்தில் 10 மாதத்துக்கு முன்பு இறந்த திருவேங்கடத்தின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் 10 மாதத்துக்கு முன் அதிகாரிகளால் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் அவர்கள், ''சுட்டுக்கொல்லப்பட்ட திருவேங்கடத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது ஊர், குடும்பம் பற்றி தெரியாத நிலையில் எங்கள் குடும்பத்துடன் தொடர்புபடுத்துகின்றனர். இதனால் எங்கள் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தவறான தகவலை பரப்பும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்