விநாயகர் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.;

Update:2024-09-12 15:25 IST

படான்,

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. மக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வருகின்றனர். அதேபோல், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இறுதி நாளில் வீடுகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அதேவேளை, சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் முன்கூட்டியே கரைக்கப்படுகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி ஆற்றில் நேற்று மாலை சிலர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்துச் சென்றனர். ஆற்றில் சிலையை கரைக்கும் போது திடீரென 7 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உடனடியாக உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டனர்.

அதே நேரத்தில் ஒரு பெண், அவரது இரண்டு மகன்கள் மற்றும் அந்த பெண்ணின் சகோதரர் ஆகிய 4 பேரும் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்