கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு - இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், வயநாட்டில் அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.
ராகுல் காந்தியின் வயநாடு பயணம் ரத்து
மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி இன்று மதியம் வயநாட்டிற்கு பயணம் செய்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருந்தார். இந்த நிலையில், தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ராகுல்காந்தியின் வயநாடு பயணம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை எதிரொலியாக 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இழப்பீடு தொகை பற்றிய விவரங்களை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிட உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
காலை 9:30 மணி முதல் 12: 30 மணிவரை மைசூரிலிருந்து சாலை மார்க்கமாக மெப்பாடி, வயநாடு சென்று மெப்பாடி அரசு உயர்நிலை பள்ளி, செயின்ட் ஜோசப் யு.பி பள்ளி, டபிள்.யூ.ஐ.எம்.எஸ்., மெப்பாடி மருத்துவமனை ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை ராகுல்காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 123ஆக உயர்வு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி 123 பேரின் சடலங்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், புதையுண்ட 125-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 98 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முண்டகை, சூரல் மலை, மேப்பாடியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இரவிலும் மீட்புப் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலச்சரிவு பேரிடரை சந்தித்துள வயநாட்டில் இரவிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குரல்மலை, முண்டகை பகுதியில் இரவிலும் மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நீரோட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் தற்காலிக பாலம் அமைத்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுகின்றனர்.
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120-ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த மற்றொரு தமிழரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஐயங்கொல்லியை சேர்ந்த கல்யான்குமார் (வயது 60) என்பவரின் உடல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காளிதாஸ் என்பவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் நிலச்சரிவில் இறந்த தமிழர் எண்ணிக்கை 2 ஆனது.
கேரளாவில் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, காசர்கோடு, திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.