உடனடி பலன் கொடுத்த சுற்றுப்பயணம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் சென்னை திரும்பினர்.

Update: 2024-10-16 05:10 GMT

சென்னை,

இலங்கை கூப்பிடும் தூரத்தில் உள்ள வெளிநாடு என்றாலும், கணிசமாக தமிழர்கள் வாழ்வதால், அங்கு நடக்கும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அங்குள்ள மொத்த மக்கள்தொகையான 2 கோடியே 31 லட்சம் பேரில் ஈழத் தமிழர்கள் மட்டும் 31 லட்சம் பேராவர். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் இடையே வர்த்தக உறவும் இருக்கிறது. பரஸ்பர சுற்றுலா பரிமாற்றமும் இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளாகவே இலங்கையில் அரசியல் புயல் வீசி இப்போது அமைதி திரும்பியிருக்கிறது. கடந்த மாதம் அங்கு இலங்கையின் 9-வது அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் சக்தி முன்னணியை சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவர் திசநாயகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்த தேர்தலுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி மாதத்தில் டெல்லிக்கு வந்ததும், குஜராத் சென்று அமுல் நிறுவனத்தை பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது. அதுபோல, பிரதமராக இந்தியாவில் படித்த 54 வயது பெண் ஹரினி அமரசூர்யாவும், வெளி விவகாரத்துறை மந்திரியாக விஜிதா ஹெராத்தும் பொறுப்பேற்றனர்.

இலங்கையில் புதிய அரசாங்கம் கடந்த மாதம் 23-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில், அந்த நாட்டுக்கு செல்லும் முதல் வெளிநாட்டு தலைவராக, இந்தியாவில் இருந்து மத்திய வெளி விவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இலங்கை சென்றார். அங்கு அவரும் இலங்கை அதிபர் திசநாயகாவும் நடத்திய பேச்சுவார்த்தை, இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதாகவும், புதிய அத்தியாயத்துக்கு அடிகோலும் வகையிலும் இருந்தது. இந்த சந்திப்பின்போது இலங்கையிலுள்ள தமிழர்கள் நலன் குறித்தும் தமிழக மீனவர்கள் குறித்தும் மத்திய மந்திரி ஜெய்சங்கர் முன்னுரிமை கொடுத்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினார்.

1987-ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை சென்றிருந்தபோது, அங்கு அவருக்கும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்தனேவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, "இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட 13-வது சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த இலங்கை அதிபர் திசநாயகா, "நான் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இலங்கை தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் சட்டம் கொண்டு வருவோம். நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் இதற்கான முயற்சிகள் தொடங்கும்" என்று உறுதி அளித்தார்.

"இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் படகுகளையும் விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக அபராத தொகையையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். மத்திய மந்திரி ஜெய்சங்கரின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் சென்னை திரும்பினர். இது மகிழ்ச்சி அளித்தாலும், இன்னும் சிறையில் இருப்பவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும், இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும். பிரதமர் நரேந்திரமோடியின் வேண்டுகோளின்படி இந்தியாவுக்கு திசநாயகா வரும்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு முக்கிய இடம்பெற வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்