காதில் இருந்து சீழ் வடிகிறதா..? அலட்சியம் வேண்டாம்

காதில் இருந்து எது வடிந்தாலும் அதை மிக அவசரமான, மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.;

Update:2025-02-18 12:03 IST

காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் காதில் இருந்து சீழ் வடிதல், கடுமையான காதுவலி , காது வீங்கிப் போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த பாதிப்புகள் பொதுவாக சிறிய வயது குழந்தைகளுக்கு, அடிக்கடி அதிகமாக காணப்படும் பிரச்சினைகளாகும். பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் வருவதுண்டு.

1) காதிலிருந்து அழுக்கு நிறத்தில் நீர் வேகமாக வெளியே வடிவது

2) மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் கெட்டியாக மெதுவாக வெளியே சீழ் வடிவது

3) காதில் இயற்கையாக ஊறும் மெழுகு, அதிகமாகி வெளியே வடிவது

4) காதிலிருந்து ரத்தம் வெளியே வடிவது

இவையெல்லாம் காதின் உட்புறத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், காயங்கள் மற்றும் தொற்று நோயினால் தான் வருகின்றன.

பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளால், நடுக்காதில் ஏற்படும் நோய்களால் தான் காதில் பிரச்சினையே ஏற்படுகிறது. காதிலிருந்து வடியும் சீழ் திரவமானது, காதிற்குள்ளே ஏற்படும் நோய் காரணமாகவே ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் காதில் சீழ் வடிவதை அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் சரியாக கவனித்திருந்தால் , அந்தக் குழந்தையின் பள்ளி ஆசிரியர்கள் சரியாக கவனித்திருந்தால், வயதான பின்பும் காதில் சீழ் வர வாய்ப்யே இல்லாமல் போயிருக்கும். கோட், சூட் போட்டுக் கொண்டு ஆபீஸ் போகிறவர்களுக்குக் கூட, காதில் சீழ் வருவதுண்டு. ஆனால் வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, காது பிரச்சினையை அதிகமாக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நோயினால் காது ஐவ்வின் பின்புறம் சீழ் பிடிக்க ஆரம்பித்து, சீழ் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து அதிகமாகி, காது ஐவ்வை வெடித்துக் கிழித்துக் கொண்டு, வெளியே வடிவதுண்டு. காது ஐவ்வு சுமார் 1 சென்டிமீட்டர் விட்டம் உள்ளது. அதாவது நமது 1 ரூபாய் நாணயத்தின் மூன்றில் ஒரு பங்கு அளவுதான் இருக்கும். ஒரு வெங்காயத்தின் மேல் தோலை விட மிகவும் மெல்லிய, மிகவும் மென்மையான, ஆனால் அதே சமயம் மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். அதை ஆயுள் முழுக்க பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

காதில் எது வடிந்தாலும் அதை மிக அவசரமான, மிக முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். விளையாட்டாக, கவனமில்லாமல் , அக்கறையில்லாமல் இருக்க வேண்டாம்.

காதில் குச்சி, பேப்பர் , கோழி இறகு, பென்சில், பட்ஸ் போன்றவைகளை விட்டு, சுத்தம் பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டு குடைவது கூடாது. இவ்வாறு செய்பவர்கள், வெளியிலுள்ள கெட்ட கிருமிகளை காதிற்குள்ளே கொண்டுபோய் விடுகிறார்கள். 

குழந்தைகள் காதிற்குள் கம்பி, பட்டன் , மணி, உணவுத்துண்டுகள் போன்றவற்றை யாரும் பார்க்காத நேரத்தில் மிகச் சாதாரணமாக போட்டு விடுவதுண்டு. மிக அதிக கவனம் தேவை.

சிறிய வயதில் ஏற்படும் காது பிரச்சினையை அந்த சமயத்திலேயே ஒழுங்கான, முறையான, சரியான சிகிச்சையை எடுத்திருந்தால், பெரியவர்களான பின்பு காது பிரச்சினை வர வாய்ப்பு மிக மிகக் குறைவு.

காது பிரச்சினை உள்ளவர்கள், தேங்காயெண்ணையில் முக்கி பிழிந்த, நன்கு இறுக்கமாக சுருட்டிய பஞ்சை காதுகளில் வைத்துக் கொண்டுதான் குளிக்க வேண்டும். குளிர்காலங்களிலும், குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போதும் , காதில் கண்டிப்பாக பஞ்சை வைத்துக் கொள்ள வேண்டும். காதுகளை மூடிய மாதிரி கழுத்தைச் சுற்றி துண்டை சுற்றிக் கொள்ள வேண்டும்.

காதில் கடுமையான வலி, வீக்கம், சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் ஆரம்பித்தால், அவர்களாகவே வைத்தியம் செய்து கொள்வதை நிறுத்திவிட்டு, காது மூக்கு தொண்டை சிகிச்சை நிபுணரைப் பார்த்து உரிய சிகிச்சை பெறவேண்டும். அலட்சியமாக இருக்க வேண்டாம். 

 

Tags:    

மேலும் செய்திகள்