உலக கோப்பை கால்பந்து: எழுச்சி பெறுமா வேல்ஸ் அணி? - அமெரிக்காவுடன் மோதல்...!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நள்ளிரவு12.30 மணிக்கு அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன.;

Update:2022-11-21 03:37 IST

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.இதில் நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன.

64 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி நட்சத்திர வீரரும், கேப்டனுமான காரெத் பாலே, துணை கேப்டன் ஆரோன் ராம்சியைத் தான் அதிகமாக நம்பி இருக்கிறது. இந்த ஆண்டில் 9 சர்வதேச போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

உலக கோப்பை போட்டியில் 11வது முறையாக கால்பதிக்கும் அமெரிக்கா, 2018ம் ஆண்டு உலக கோப்பைக்கு தகுதி பெறவில்லை. சராசரி 24 வயதை கொண்டுள்ள இளம் படையாக களம் இறங்கும் அமெரிக்க அணியில் கிறிஸ் டியன் புலிசிச், ஜியோவன்னி ரேனா, செர்ஜினோ டெஸ்ட்,யூனுஸ் முசா, வெஸ்டன் மெக்கன்னி, டெய்லர் ஆடம்ஸ் ஆகியோர் கலக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் மோதியுள்ளன. ஒன்றில் அமெரிக்கா வெற்றி பெற்றது. மற்றொன்று டிரா ஆனது குறிப்பிடத்தக்கது . 

Tags:    

மேலும் செய்திகள்