உலக கோப்பை கால்பந்து: நெதர்லாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா செனகல்?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன.;

Update:2022-11-21 04:19 IST

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன.

தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறதே தவிர கோப்பையை வென்றதில்லை. தனது கடைசி 15 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. டென்ஸில் டம்பிரைஸ், விர்ஜில் வான் டிஜ், கோடி கேக்போ, மெம்பிஸ் டிபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

3வது முறையில் உலக கோப்பையில் விளையாடும் ஆப்பிரிக்க தேசமான செனகல் அதிகபட்சமாக 2002-ம் ஆண்டில் காலிறுதி சுற்றை எட்டி இருக்கிறது. காலில் ஏற்பட்ட காயத்தல் கடைசி நேரத்தில் சாடியோ மனே விலகியது செனகலுக்கு பெரும் சறுக்கலாகும். இவர் தான் செனகல் அணிக்காக அதிக கோல்கள் ( 34 கோல் ) அடித்தவர் ஆவார்.

இருப்பினும் ஈடோர்ட் மெண்டி, கலிடோவ் கோலிபே, இத்ரிசா கயே, நம்பால்ஸ் மெண்டி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கைகொடுத்தால் நெதர்லாந்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். சர்வதேச போட்டியில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். 

Tags:    

மேலும் செய்திகள்