உலக கோப்பை கால்பந்து இனிவரும் போட்டிகள் : கிராபிக்ஸ் காட்சிகளுடன் முழு விவரம்
கால் இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறி உள்ளன. இந்நிலையில் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
தோகா,
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நெதர்லாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஜப்பான், குரோசியா, பிரேசில், தென் கொரியா, பிரான்ஸ், போலந்து, இங்கிலாந்து, செனகல், மொரோகோ, ஸ்பெயின், போர்ச்சுகல், சுசிட்சர்லாந்து ஆகிய 16 அணிகள் 2-வது சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறின.
பெரிய அணிகள் தோல்வி
லீக் சுற்றின் முடிவில் போட்டியை நடத்தும் கத்தார், ஜெர்மனி, பெல்ஜியம், உருகுவே போன்ற முக்கிய அணிகள் வெளியேறின. லீக் சுற்றில் சில அதிர்ச்சிகரமான தோல்விகளும் இடம் பெற்றன. அவற்றில் சவுதி அரேபியா அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது, ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது, மொரொகோ அணி 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது, துனிசியா அணி 1-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தியது, ஜப்பான் அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது, தென் கொரிய அணி 2-1 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது, கேமரூன் அணி 1-0 என்ற கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது உள்ளிட்ட ஆட்டங்கள் மிக முக்கியமானவை.
ரவுண்ட் 16
அதன் பின்னர் 2-வது சுற்று (ரவுண்ட் 16) ஆட்டங்கள் கடந்த 3ந் தேதி முதல் நடைபெற்று வந்தன. இந்த 2வது சுற்று ஆட்டத்தின் முடிவில் 16 அணிகளில் இருந்து 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இதில் 2வது சுற்று ஆட்டத்திலும் அதிர்ச்சிகரமான தோல்வி உள்ளது. அதாவது மொரோகோ அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
கால்இறுதி போட்டிகள்
இந்நிலையில் கால்இறுதி சுற்றுக்கு நெதர்லாந்து, அர்ஜென்டினா, குரோசியா, பிரேசில், இங்கிலாந்து, பிரான்ஸ், மொரோகோ, போர்ச்சுகல் ஆகிய 8 அணிகள் முன்னேறி உள்ளன. இந்நிலையில் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.அதில் இன்று நடைபெறும் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் குரோசியா-பிரேசில் (இந்திய நேரம் இரவு 8.30) , நெதர்லாந்து-அர்ஜென்டினா (இந்திய நேரம் நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.
நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் மொரோகோ-போர்ச்சுகல் (இந்திய நேரம் இரவு 8.30), இங்கிலாந்து-பிரான்ஸ் (இந்திய நேரம் நள்ளிரவு 12.30) ஆகிய அணிகள் மோதுகின்றன.
8 அணிகள் கடந்துவந்த பாதை
இந்நிலையில் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள 8 அணிகள் கடந்து வந்த பாதையை பற்றி பார்க்கலாம்.
குரோசியா:-
கடந்த உலக கோப்பையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய குரோசியா அணி அந்த போட்டியில் 4-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதையடுத்து இந்த உலக கோப்பையில் குரூப் எப் பிரிவில் மொரோகோ, பெல்ஜியம், கனடா அணிகளுடன் இடம் பெற்றிருந்தது குரோசியா அணி. அந்த அணி லீக் சுற்றுகளில் மொரோகோ மற்றும் பெல்ஜியம் அணிகளுடன் டிரா கண்ட அந்த அணி கனடாவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இதையடுத்து 2வது சுற்றில் ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்ட நேரம், கூடுதல் நேரங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகித்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. காலிறுதியில் அந்த அணி பலம் வாய்ந்த பிரேசில் அணியை சந்திக்கிறது. கடந்த உலகக்கோப்பையை நெருங்கி வந்து தவற விட்ட குரோசியா இந்த முறை கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் உள்ளது. அந்த அணி காலிறுதி சுற்றில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுமா என பார்க்கலாம்.
லீக் சுற்று
குரோசியா - மொரோகோ (0-0) டிரா
குரோசியா - கனடா (4-1) வெற்றி
குரோசியா - பெல்ஜியம் (0-0) டிரா
2வது சுற்று:- குரோசியா - ஜப்பான் 1-1 ( 3-1 பெனால்டி ஷூட் அவுட்) வெற்றி
பிரேசில்:-
5 முறை சாம்பியனான பலம் வாய்ந்த பிரேசில் அணி குரூப் ஜி பிரிவில் சுவிட்சர்லாந்து, கேமரூன், செர்பியா ஆகிய அணிகளுடன் இடம் பிடித்திருந்தது. அந்த அணி லீக் சுற்றுகளில் செர்பியா ( 2-0 ) என்ற கணக்கிலும், சுவிட்சர்லாந்தை (1-0) என்ற கணக்கிலும் வீழ்த்தியது. கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி (0-1) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இடையடுத்து நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் அந்த அணி தென் கொரியாவை 4-1 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. 5 முறை சாம்பியனான பிரேசில் இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல பலமாக தயாராகி வருகிறது. பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.
லீக் சுற்று
பிரேசில் - செர்பியா (2-0) வெற்றி
பிரேசில் - சுவிட்சர்லாந்து (1-0) வெற்றி
பிரேசில் - கேமரூன் (0-1) தோல்வி
2வது சுற்று:- பிரேசில் - தென் கொரியா (4-1) வெற்றி
நெதர்லாந்து:-
குரூப் ஏ பிரிவில் செனகல், ஈகுவடார், கத்தார் ஆகிய அணிகளுடன் இடம் பெற்றிருந்த நெதர்லாந்து அணி லீக் சுற்றில் செனகலை (2-0) என்ற கணக்கிலும், கத்தாரை (2-0) என்ர கணக்கிலும் வீழ்த்தியது. ஈகுவடார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் (1-1) என்ற கணக்கில் டிரா கண்டது. தனது குரூப்பில் முதக் இடம் பிடித்த நெதர்லாந்து அணி 2வது சுற்றில் அமெரிக்காவை (3-1) என்ற கணக்கில் வீழ்த்தியது. அந்த அணி கால்இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
லீக் சுற்று
நெதர்லாந்து - செனகல் (2-0) வெற்றி
நெதர்லாந்து - ஈகுவடார் (1-1) டிரா
நெதர்லாந்து - கத்தார் (2-0) வெற்றி
2வது சுற்று:- நெதர்லாந்து - அமெரிக்கா (3-1) வெற்றி
அர்ஜென்டினா:-
உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் லயோனல் மெஸ்சி தலையிலான அர்ஜென்டினா அணி குரூப் சி பிரிவில் போலந்து, மெக்சிகோ, சவுதி அரேபியா அணிகளுடன் இடம் பெற்றிருந்தது. அந்த அணி லீக் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் சவுதி அரேபியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதையடுத்து நடைபெற்ற ஆட்டங்களில் அந்த அணி மெக்சிகோ (2-0), போலந்து (2-0) என்ற கணக்கில் வீழ்த்தி தனது பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இதையடுத்து 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவை சந்தித்த அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் நெதர்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில் அரை இறுதியில் பிரேசிலை எதிர்கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது.
லீக் சுற்று
அர்ஜென்டினா - சவுதி அரேபியா (1-2) தோல்வி
அர்ஜென்டினா - மெக்சிகோ (2-0) வெற்றி
அர்ஜென்டினா - போலந்து (2-0) வெற்றி
2வது சுற்று:- அர்ஜென்டினா - ஆஸ்திரேலியா (2-1) வெற்றி
மொரோகோ:-
உலக கோப்பை தொடரில் குரூப் எப் பிரிவில் குரோசியா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளுடன் இடம் பெற்ற மொரோகோ அணி லீக் சுற்றுகளில் குரோசியா (0-0) எதிராக டிரா கண்ட அந்த அணி அடுத்த இரு ஆட்டங்களிலும் முறையே பெல்ஜியம் (2-0), கனடா (2-1) அணிகளை வீழத்தி ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேரியது. இந்த அணி 2வது சுற்றில் ஸ்பெயினுடன் மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட் அவுட்டுக்கு சென்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் 3-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி மொரோகோ அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.
லீக் சுற்று
மொரோகோ - குரோசியா (0-0) டிரா
மொரோகோ - பெல்ஜியம் (2-0) வெற்றி
மொரோகோ - கனடா (2-1) வெற்றி
2வது சுற்று:- மொரோகோ - ஸ்பெயின் 0-0 (3-0 பெனால்டி ஷூட் அவுட்) வெற்றி
போர்ச்சுகல்:-
நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனோல்டா அங்கம் வகிக்கும் போர்ச்சுகல் அணி லீக் சுற்றுகளில் கானா (3-2) என்ற கணக்கிலும், உருகுவேவை (2-0) என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இதையடுத்து தென் கொரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் (1-2) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதையடுத்து ரவுண்ட் ஆப் 16 சுற்றில் அந்த அணி சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ களம் இறக்கப்படாமல் அவருக்கு பதிலாக இளம் வீரர் ராமோஸ் இறக்கப்பட்டார். அவர் அந்த வாய்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால் ரொனால்டோவின் இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது.
லீக் சுற்று
போர்ச்சுகல் - கானா ( 3-2)
போர்ச்சுகல் - உருகுவே (2-0)
போர்ச்சுகல் - தென் கொரியா (1-2) தோல்வி
2வது சுற்று:- போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து (6-1) வெற்றி
இங்கிலாந்து:-
ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் ஈரானை(6-2) என்ற கணக்கிலும், வேல்சை (3-0) என்ற கணக்கில்ம் வீழ்த்தியது. அமெரிக்கா அணிக்கு எதிரான ஆடத்தில் (0-0) என டிரா கண்டது. இதையடுத்து நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் செனகல் அணியை (3-0) என்ற கணக்கில் வீழ்த்தி கால்இறுதி முன்னேறியது.
லீக் சுற்று
இங்கிலாந்து - ஈரான் (6-2) வெற்றி
இங்கிலாந்து - அமெரிக்கா (0-0) டிரா
இங்கிலாந்து - வேல்ஸ் (3-0) வெற்றி
2வது சுற்று:- இங்கிலாந்து - செனகல் ( 3-0) வெற்றி
பிரான்ஸ்:-
உலககோப்பை சாம்பியனான பிரான்ஸ் அணி லீக் சுற்று ஆட்டங்களில் ஆஸ்திரேலியா (4-1), டென்மார்க் (2-1) அணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. துனிசியாவுக்கு எதிராக எளிதில் வெற்றி பெரும் என நினைத்த வேளையில் (0-1) என்ர கணக்கில் பிரான்ஸ் அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்றில் போலந்து அணியை (3-1) என்ற கணக்கில் பந்தாடியது.
லீக் சுற்று
பிரான்ஸ் - ஆஸ்திரேலியா (4-1) வெற்றி
பிரான்ஸ் - டென்மார்க் ( 2-1) வெற்றி
பிரான்ஸ் - துனிசியா (0-1) தோல்வி
2வது சுற்று:- பிரான்ஸ் - போலந்து ( 3-1) வெற்றி
காலிறுதி ஆட்டங்கள்:-
டிசம்பர் 9, 2022
போட்டி எண் 57:-
பிரேசில் - குரோசியா (இரவு 8.30 மணி)
போட்டி எண் 58:-
நெதர்லாந்து -அர்ஜென்டினா (நள்ளிரவு 12.30 மணி)
டிசம்பர் 10, 2022
போட்டி எண் 59:-
மொரோகோ - போர்ச்சுகல் (இரவு 8.30 மணி)
போட்டி எண் 60:-
இங்கிலாந்து - பிரான்ஸ் ( நள்ளிரவு 12.30 மணி)
டிசம்பர் 11 மற்றும் 12 ஓய்வு நாள்
அரையிறுதி ஆட்டங்கள்:-
டிசம்பர் 13, 2022
போட்டி எண் 61:-
வெற்றியாளர்கள் (போட்டி எண் 57 - போட்டி எண் 58)
டிசம்பர் 14, 2022
போட்டி எண் 62:-
வெற்றியாளர்கள் (போட்டி எண் 59 - போட்டி எண் 60)
டிசம்பர் 15 மற்றும் 16 ஓய்வு நாள்
மூன்றாவது இடம்:-
டிசம்பர் 17, 2022
போட்டி எண் 63:-
தோல்வி அடைந்த அணிகள் (போட்டி எண் 61 - போட்டி எண் 62)
சாம்பியன் பட்டம்:
டிசம்பர் 18, 2022
போட்டி எண் 64:-
வெற்றியாளர்கள் (போட்டி எண் 61 - போட்டி எண் 62)
உலக கோப்பையில் வழங்கப்படும் விருதுகள்:-
இந்நிலையில் உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரருக்கு கோல்டன் பூட் விருதும், சிறந்த கோல் கீப்பருக்கு கொல்டன் க்ளவுவ் விருதும், உலக கோப்பையில் சிறந்த வீரருக்கு கோல்டன் பால் விருதும் வழங்கப்படும். அதை பற்றிய சில குறிப்புகள்,
தங்க பூட்:-
கோல்டன் பூட் (தங்க பூட்)விருது ஒரு உலக கோப்பை தொடரில் அதிக அளவில் கோல் அடிக்கும் வீரருக்கு கொடுக்கப்படுகிறது. கடந்த உலக கோப்பையில் இந்த தங்க பூட் விருதை இங்கிலாந்தின் ஹாரி கேன் வாங்கினார். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தங்க பூட் விருதை கைப்பற்ற இருக்கும் போட்டியாளர்களில் எம்பாப்வே முன்னிலையில் இருக்கிறார். இந்த உலக கோப்பையில் அதிகமாக கோல் அடித்த வீரர்கள் விவரம்
எம்பாப்வே - பிரான்ஸ் - 5 கோல்
லயோனல் மெஸ்சி -அர்ஜென்டினா - 3 கோல்
ரிச்சர்லிசன் - பிரேசில் - 3 கோல்
கோன்கலோ ரமோஸ் - போர்ச்சுகல் - 3 கோல்
ஓலிவியர் ஜிரோட் - பிரான்ஸ் - 3 கோல்
என்னர் வலென்சியா - ஈகுவடார் - 3 கோல்
புகாயோ சகா இங்கிலாந்து - 3 கோல்
கோடி காக்போ - நெதர்லாந்து - 3 கோல்
அல்வாரோ மோராட்டா - ஸ்பெயின் - 3 கோல்
மார்கஸ் ராஷ்போர்ட் - இங்கிலாந்து - 3 கோல்
குறிப்பு:- ஸ்பெயின் மற்றும் ஈகுவடார் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறவில்லை
தங்க கையுறை:-
கோல்டன் க்ளவுவ் (தங்க கையுறை)விருது ஆரம்பத்தில் ரஷிய கோல்கீப்பரை கவுரவிக்கும் விதமாக லெவ் யாஷின் என அழைக்கப்பட்டது. பின்னர் இது தங்க கையுறை என பெயர் மாற்றப்பட்டது. இந்த உலக கோப்பை தொடரில் தங்க கையுறை வெல்ல வாய்ப்பு உள்ள கோல்கீப்பர்கள்
அலிசன் பெக்கர் (பிரேசில்)
எமிலியானோ மார்டினெஸ் (அர்ஜென்டினா)
ஹ்யூகோ லோரிஸ் (பிரான்ஸ்)
டொமினிக் லிவகோச் (குரோசியா)
யாசின் பவுனோ ( மொரோகோ)
வோஜ்சிக் ஸ்செஸ்னி ( போலந்து )
தங்க பந்து;-
கோல்டன் பால்(தங்க பந்து)என்பது ஒரு கோப்பை ஆகும். 1982 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒரு உலக கோப்பை தொடரில் சிறந்த செயல்திறன் கொண்ட வீரருக்கு வழங்கப்படுகிறது. உலக கோப்பை தொடரில் சிறந்த 3 வீரர்களுக்கு இந்த விருது வங்கப்படுகிறது. அதில் முதல் இடம் பிடிப்பவருக்கு தங்க பந்து விருதும், 2வது வீரருக்கு வெள்ளி பந்து விருதும், 3வது வீரருக்கு வெண்கல ப்ந்து விருதும் வழங்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் இந்த விருதுகளை வாங்க வாய்ப்பு உள்ள வீரர்கள் விவரம்:-
எம்பாப்வே ( பிரான்ஸ்)
லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா)
புரூனோ பெர்னாண்டஸ் (போர்ச்சுகல்)
ரிச்சர்லிசன் (பிரேசில்)
நெய்மர் (பிரேசில்)
நெய்மரின் சாதனை:-
கடந்த 3 உலககோப்பை தொடரில் கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் நெய்மர் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் லயோனல் மெஸ்சி, ரோனால்டோ, செர்டன் ஷாகிரி, இவான் ஒரே ஆகியோர் கடசி 3 உலகக்கோப்பை தொடர்களில் கோல் அடித்துள்ளனர்.
ரொனோல்டோவின் வாய்ப்பை தட்டி பறித்த இளம் வீரர்:-
ரவுண்ட் 16 சுற்றில் போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்தை எதிர் கொண்டு விளையாடியது. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரொனோல்டோ மாற்று வீரராக களம் இறக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் இறங்கிய கோன்கலோ ராமோஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அவருக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.
ரொனால்டோ சாதனையை முறியடித்த பெப்பே:-
உலக கோப்பையில் அதிக வயதில் கோல் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை பெப்பே படைத்துள்ளார். 39 வயதான பெப்பே இந்த உலக கோப்பையில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கோல் அடித்து அசத்தினார். இதன் மூலம் உலக கோப்பையில் அதிக வயதில் கோல் அடித்த 2வது வீரர் என்ற ரொனால்டோவின் சாதனையை அவர் முறியடித்தார். முதல் இடத்தில் கேமரூனின் ரோஜர் மில்லா 1994 ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் ரஷியா அணிக்கு எதிராக தனது 42 வயதில் கோல் அடித்தார். இந்த வரிசையில் 3வது இடத்தில் ரொனோல்டா உள்ளார். அவர் 37 வயதில் இந்த உலககோப்பையில் கானா அணிக்கு எதிராக கோல் அடித்தார்.
டொமினிக் லிவகோவிச் (குரோசியா கோல் கீப்பர்):-
குரோசியா கோல் கீப்பர் டொமினிக் லிவகோவிச் இந்த உலக கோப்பையில் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். அவர் ஜப்பான் அணிக்கு எதிரான ரவுண்ட் ஆப்16 சுற்றில் அந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த பெனாஇடி ஷூட் அவுட்டில் டொமினிக் லிவகோவிச் ஜப்பான் வீரர்களை பெனால்டி வாய்ப்புகளை அபாரமாக தடுத்து அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்ததோடு மட்டுமின்றி அணியை காலிறுதிக்கு அழைத்து வந்துள்ளார்.