உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவை வீழ்த்தி 3-ஆம் இடம் பிடித்த குரோஷியா அணி..!!

உலக கோப்பை கால்பந்தின் 3-வது இடத்துக்கான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது.

Update: 2022-12-17 16:56 GMT

தோகா,

கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நாளை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினாவை சந்திக்கிறது.

முன்னதாக இன்று இரவு கலீபா சர்வதேச ஸ்டேடியத்தில் தொடங்கிய 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரைஇறுதியில் தோல்வி கண்ட குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதின.



 



பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் 7-வது நிமிடத்திலே குரேஷியா அணி வீரர் ஜோஸ்கோ வார்டியோல் தனது அணிக்கான முதல் கோலை அடித்து மாஸ் காட்டினார். இதற்கு பதிலடியாக மொரோக்கோ அணி வீரர் அஷ்ரப் டேரி ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமன் செய்தார்.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் குரேஷியா அணி வீரர் மிஸ்லாவ் ஓர்சிக் தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இதன்முலம் ஆட்டத்தில் முதல் பாதியில் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.


 



அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் குரேஷியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வீழ்த்தி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.


 



முன்னதாக குரோஷியா அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் மொராக்கோவுடன் கோலின்றி டிரா கண்டது. அடுத்த ஆட்டத்தில் கனடாவை வென்றது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் கோலின்றி டிரா செய்து தனது பிரிவில் 2-வது இடத்துடன் நாக்-அவுட் சுற்றுக்குள் கால்பதித்தது. 2-வது சுற்றில் ஜப்பானுடன் கூடுதல் நேரத்தில் டிரா (1-1) செய்த குரோஷியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் சாய்த்தது. கால்இறுதியில் பிரேசிலுடன் கூடுதல் நேரம் முடிவில் டிரா (1-1) செய்து பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் 0-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி அடைந்திருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்