அர்ஜென்டினாவுக்கு எதிராக வரலாற்று வெற்றி - பொது விடுமுறை அறிவித்த சவுதி அரேபியா
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றிபெற்றது.;
தோஹா,
2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடந்த ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியுடன் சவுதி அரேபியா மோதியது.
ஆட்டம் துவங்கிய 10வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்தார். இதனை தொடர்ந்து ஆட்டத்தின் 48 மற்றும் 53வது நிமிடங்களில் சவுதி அரேபியா அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தனர்.
இதனால், ஆட்டம் விறுவிறுப்படைந்த நிலையில் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால், இறுதி வரை அந்த அணியால் 2-வது கோல் அடிக்க முடியவில்லை.
இதன் மூலம் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா வரலாற்று வெற்றிபெற்றது. இந்த வெற்றியை சவுதி அரேபிய கால்பந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் சவுதி அரேபிய அரசு இன்று பொதுவிடுமுறை அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அளித்து சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியா இன்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.