உலகக்கோப்பை கால்பந்து: போர்ச்சுக்கல்லை வீழ்த்தி முதன் முறையாக அரை இறுதிக்கு முன்னேறிய மொராக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல்லை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றிபெற்றது.

Update: 2022-12-10 17:06 GMT

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் அல்துமாமா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3-வது கால்இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் போர்ச்சுகல் அணி, 22-வது இடத்தில் உள்ள மொராக்கோவை சந்தித்தது.

கடந்த ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடக்கத்தில் களம் இறக்கப்படவில்லை. கேப்டன் பொறுப்பை பெப்பே கவனித்தார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியினர் வசம் பந்து அதிக நேரம் வலம் வந்தது. போர்ச்சுகல் அணியின் ஜோ பெலிக்ஸ் கோல் வலையை நோக்கி அடித்த பந்தை மொராக்கோ அணியின் கோல் கீப்பர் யாசின் போனோ தடுத்து வெளியேற்றினார். இதேபோல் மொராக்கோ வீரர் யூசெப் என் நெஸ்ரி கோல் இலக்கை நோக்கி அடித்த பந்து மயிரிழையில் நழுவியது.

தலையால் முட்டி கோல்

42-வது நிமிடத்தில் மொராக்கோ அணி கோல் அடித்தது. அந்த அணியின் யாஹா அட்டியாட் கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் யூசெப் என் நெஸ்ரி தலையால் முட்டி கோலாக்கினார். முதல் பாதியில் மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்தினாலும் போர்ச்சுகல் அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை. போர்ச்சுகல் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ 51-வது நிமிடத்தில் களம் இறக்கப்பட்டார். போர்ச்சுகல் அணியில் புருனோ பெர்னாண்டஸ், கோன்கலோ ரமோஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. மொராக்கோ கோல்கீப்பர் கடைசி வரை கச்சிதமாக செயல்பட்டு எதிரணியின் முயற்சிகளை முறியடித்து கதாநாயகனாக கலக்கினார்.

மொராக்கோ அணி சரித்திரம் படைத்தது

முடிவில் மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போச்சுகல் அணிக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற வரலாற்று சாதனையை மொராக்கோ படைத்தது.

போர்ச்சுகல் அணியின் தோல்வியால் அந்த நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்ட வீரர்கள் கண்ணீர் மல்க வெளியேறினர்.

மொராக்கோ அணி வருகிற 14-ந் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்