ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ அணி
பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ;
தோகா,
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான ஸ்பெயின், 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணியை சந்தித்தது.
பந்து அதிக நேரம் ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும், மொராக்கோ அணியினர் அதிரடி தாக்குதல் ஆட்டம் மூலம் ஸ்பெயின் அணிக்கு அச்சுறுத்தல் அளித்தனர். 26-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்கோ அசென்சியோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 33-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் மஸ்ராய் கோல் வலையை நோக்கி அடித்த வலுவான ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமோன் தடுத்து நிறுத்தினார்.
இரு அணியினரும் எதிரணி கோல் எல்லையை முற்றுகையிட்டு அவ்வப்போது கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் கடைசி வரை தடுப்பு அரணை தகர்க்க முடியவில்லை. கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு 'பிரிகிக்' வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பில் டேனி ஒல்மோ அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாஸ்சின் தடுத்து வெளியேற்றினார்.
வழக்கமான நேரத்தில் (90 நிமிடம்) ஆட்டம் கோலின்றி சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் எதிரணியின் கோல் கம்பத்தை சூழ்ந்து தாக்குதல் நடத்தினாலும் கோல் வலைக்குள் பந்தை அடிக்க முடியவில்லை.
கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்ததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது. மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். ஸ்பெயின் அணி தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் தோல்வியை தழுவியது. அந்த அணியின் பாப்லோ சராபி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார்.
பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது. கால்இறுதியில் மொராக்கோ அணி , போர்ச்சுகல் அல்லது சுவிட்சர்லாந்து அணிகளில் ஒன்றை சந்திக்கும்.