உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை முதல் முறையாக வீழ்த்தி கேமரூன் சாதனை!
பிரேசிலை வீழ்த்திய போதிலும் கேமரூன் அணி தொடரில் இருந்து வெளியேறியது.;
லுசைல் [கத்தார்],
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜி பிரிவில் நடைபெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் கேமரூன் மற்றும் பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
உலகக்கோப்பை கால்பந்து தொடரில், தொடர்ந்து வெற்றி பெற்றுவந்த பலம் வாய்ந்த பிரேசில் அணியை, 0 - 1 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணி வீழ்த்தியது. இதன்மூலம், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் அணியை வீழ்த்திய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சாதனையையும் கேமரூன் அணி படைத்துள்ளது.
மற்றொரு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது. இதன்மூலம், புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்ததால் சுவிட்சர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. செர்பியா அணி தொடரில் இருந்து வெளியேறியது.
சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றதால், ஜி பிரிவில் புள்ளிப் பட்டியலில் பிரேசில் முதல் இடம் பிடித்தது. இதனால் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போதிலும், கேமரூன் அணி தொடரில் இருந்து வெளியேறியது.