கால்இறுதியோடு பிரேசில் அணி வெளியேற்றம்; பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கால்இறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியாவிடம் வீழ்ந்தது.

Update: 2022-12-09 23:14 GMT

தோகா,

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு எஜூகேசன் சிட்டி மைதானத்தில் அரங்கேறிய முதலாவது கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் அணியுமான பிரேசில், குரோஷியாவுடன் மோதியது.

தொடக்கத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெறும் முனைப்புடன் இரு அணியினரும் வரிந்து கட்டினர். ஆட்டத்தின் 105-வது நிமிடத்தில் பிரேசில் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் இந்த கோலை அடித்தார். ஆனால் வெற்றியை நெருங்கிய சமயத்தில் பிரேசில் கோட்டை விட்டது. 116-வது நிமிடத்தில் குரோஷியாவின் புருனோ பெட்கோவிச் கோல் போட்டு சமனுக்கு கொண்டு வந்தார்.

கூடுதல் நேரத்தின் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஆனதால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. அதே சமயம் பிரேசில் 4 வாய்ப்புகளில் 2-ஐ வீணடித்தது.

பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் குரோஷியா 4-2 என்ற கணக்கில் பிரேசிலை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. கோப்பைபை வெல்லும் வாய்ப்பில் இருந்த 5 முறை சாம்பியனான பிரேசில் கால்இறுதியோடு மூட்டையை கட்டியது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி கோப்பையை வென்றதில்லை.

Tags:    

மேலும் செய்திகள்