ஒரு கோல் அடித்து பெல்ஜியம், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி
உலக கோப்பை போட்டியில் தனது தொடக்க லீக் ஆட்டங்களில் ஒரு கோல் அடித்து பெல்ஜியம், சுவிட்சர்லாந்து அனிகள் வெற்றி பெற்றன.
தோகா,
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாள் நள்ளிரவில் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த 'எப்' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, 41-வது இடத்தில் இருக்கும் கனடாவை எதிர்கொண்டது. பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் ரோம்லு லுகாகு காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் களம் இறங்கவில்லை.
32 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கனடா தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அதே நேரத்தில் பெல்ஜியம் வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். இரு அணியினரும் சில வாய்ப்புகளை தவற விட்டனர்.
44-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி கோல் அடித்தது. நீண்ட தூரத்தில் இருந்து டாபி ஆல்டர்வியர்டு அடித்த பந்தை மிக்கி பட்ஷாயி கோலாக்கினார். அதுவே வெற்றியை நிர்ணயிக்கும் கோலாகவும் அமைந்தது.
அதன் பிறகு பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. 2-வது முறையாக உலக கோப்பை போட்டியில் கால்பதித்து இருக்கும் கனடா அணி இதுவரை உலக கோப்பையில் கோல் அடித்ததில்லை என்ற பரிதாபம் நீடிக்கிறது.
இதேபோல் நேற்று மாலை 'ஜி' பிரிவில் நடந்த சுவிட்சர்லாந்து-கேமரூன் அணிகள் இடையிலான ஆட்டமும் ஒரே கோலில் முடிவு தீர்மானிக்கப்பட்டது. இதில் இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டினாலும் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
48-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் கேப்டன் கிரானிட் ஸாகா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பிரீல் எம்போலோ கோல் வலைக்குள் திணித்தார். கேமரூன் வீரர்கள் இலக்கை நோக்கி நிறைய ஷாட்கள் அடித்த போதிலும், சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோம்மெர் அற்புதமாக செயல்பட்டு தங்கள் அணியை காத்தார்.
முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை சாய்த்தது. உலக கோப்பை போட்டி தொடரில் கேமரூன் அணி தனது கடைசி 8 ஆட்டங்களில் தொடர்ச்சி யாக தோல்வியை சந்தித்துள்ளது நினைவு கூரத்தக்கது.