`அமீரகம் போலியோவை ஒழிப்பதில் உலக அளவில் முன்மாதிரியாக உள்ளது'; சுகாதாரத்துறை மந்திரி சொல்கிறார்

`போலியோவை முற்றிலும் ஒழிப்பதில் உலக அளவில் அமீரகம் முன்மாதிரியாக உள்ளது’ என சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு அமைச்சக மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது பின் நாசர் அல் ஓவைசிஸ் கூறியுள்ளார்.

Update: 2023-10-24 19:00 GMT

அபுதாபி,

இளம்பிள்ளை வாதம் அல்லது போலியோமியெலிட்டிஸ் என்பதன் சுருக்கமே போலியோ. இந்த நோய்க்கு முதலில் தடுப்பு மருந்து கண்டுபிடித்த ஜோனாஸ் சால்க்கை கவுரவிக்கும் விதமாக அக்டோபர் 24-ந் தேதி உலக போலியோ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அவரது தலைமையிலான குழுவினர் கடந்த 1995-ம் ஆண்டு போலியோவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தனர். இந்த இளம்பிள்ளை வாத நோய் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. இதன் காரணமாக பக்கவாதம் அல்லது மரணம் கூட ஏற்படலாம். தற்போது பல்வேறு நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் உலக அளவில் முற்றிலும் அழிக்கப்பட்ட நோயாக இது மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நேற்று அமீரகத்திலும் உலக போலியோ தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்த தினம் குறித்து அமீரக சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு அமைச்சகத்தின் மந்திரி அப்துல் ரஹ்மான் பின் முகம்மது பின் நாசார் அல் ஓவைசிஸ் கூறியதாவது:-

போலியோவை எதிர்த்து போராடுவதற்கான அமீரகத்தின் இடைவிடாத முயற்சி அடுத்த தலைமுறையினரின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.

உலக சுகாதார அமைப்பின் லட்சிய திட்டமான 2030-ம் ஆண்டுக்குள் போலியோவை முற்றிலும் ஒழிக்க அமீரகம் தொடர்ந்து பின்னால் நின்று ஆதரவை தரும். அமீரகத்தின் முயற்சிகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புகளிடம் இருந்து தகுதியான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. போலியோவை ஒழிப்பதில் அமீரகம் பெரும் முயற்சி எடுத்துள்ளது. மேலும் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு பிரகாசமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்துள்ளது. அமீரகத்தின் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள் உலக அளவில் முன்மாதிரியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்