அமீரகத்தில் திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சையை மேற்கொள்ளலாம்

அமீரகத்தில் திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

Update: 2023-10-26 20:30 GMT

அபுதாபி,

அமீரகத்தில் புதிய சுகாதார சட்ட திருத்தம் குறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இனி திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சையை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகில் நவீன மருத்துவ சிகிச்சைகளில் ஐ.வி.எப். எனப்படும் செயற்கை கருவூட்டல் முறை வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் குழந்தை பேறு இல்லாமல் பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு இந்த செயற்கை கருவூட்டல் சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும். இந்த முறையில் கணவரிடம் இருந்து பெறப்பட்ட விந்தணு, மனைவியின் கருப்பையில் செலுத்தி செயற்கையாக கருவூட்டம் செய்யப்பட்டு குழந்தை பெறுவது ஆகும்.

இதில் பல முறைகள் உள்ளது. விந்தணுவை வெளியில் உள்ள ஒரு கருமுட்டையில் கருவுறச்செய்து பிறகு கருப்பையில் வைப்பது போன்றவை அடங்கும். இதை வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து குழந்தை பெறும் வாடகை தாய் முறையிலும் குழந்தைகளை பெற்று வருகின்றனர். ஆனால் அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு பகுதிகளில் வாடகைத்தாய் முறை தடை செய்யப்பட்டு இருந்தது. இதில் தற்போது அமீரகத்தில் கொண்டு வரப்பட்ட புதிய மருத்துவ சட்ட விதிகளின்படி அந்த தடை செய்யப்பட்ட ஷரத்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ளூர் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் அமீரக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள ஷரத்து 8 இன்படி திருத்தப்பட்ட புதிய மருத்துவ சட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி இனி அமீரகத்தில் திருமணமாகாத, முஸ்லிம் அல்லாதோர் செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையை மேற்கொள்ளலாம். இதுவரை திருமணமானவர்கள் மட்டுமே செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. திருமண சான்றிதழ் இல்லை என்றால் முஸ்லிம் அல்லாத நபர்கள் செயற்கை கருவூட்டல் முறையை பயன்படுத்த சுகாதார ஆணையத்திடம் முன் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம்.

முஸ்லிம் தம்பதிகள் செயற்கை கருவூட்டலை செய்து கொள்ள திருமண ஆதாரத்தை காண்பிப்பது கட்டாயமாகும். புதிய சட்ட ஆணையின்படி திருமணமாகாத, முஸ்லிம் அல்லாத தம்பதிகள் இருவரின் பெயரிலும் குழந்தையை பதிவு செய்துகொள்ள வேண்டும். சமீப காலம் வரை அமீரகத்தில் கருவை உறைய வைத்து பாதுகாப்பது தடை செய்யப்பட்டு இருந்தது. இனி புதிய சட்டத்திருத்தத்தின்படி கருமுட்டைகளை பாதுகாக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்