அமீரக அதிபருடன் சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு
அரசுமுறை பயணமாக நேற்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் அமீரகம் வருகை புரிந்தார். பின்னர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இதில் இரு தரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அபுதாபி,
அமீரகம்- சிங்கப்பூர் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. மேலும் சிங்கப்பூர் மத்திய கிழக்கு நாடுகளில் அமீரகத்தின் முக்கிய வர்த்தக பங்குதாரராக விளங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் இருதரப்பு எண்ணெய் சாரா வர்த்தகத்தின் மதிப்பு 4 ஆயிரத்து 100 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளதாக அமீரக அரசு தகவல் அளித்துள்ளது.
இந்த நிலையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று தனி விமானம் மூலம் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் ஜனாதிபதி முனையத்திற்கு வருகை புரிந்தார். அதன் பிறகு அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் அவரை அபுதாபி கஸர் அல் வத்தன் அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வந்தார்.
தொடர்ந்து அந்த வளாகத்தில் அவருக்கு முப்படைகளின் ராணுவ அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில் 21 குண்டுகள் முழங்க இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. பிறகு அந்த அரண்மனைக்குள் இருதலைவர்களும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசினர்.
அதன் பின்னர் இரு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தகம், பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாறுபாடு, சவால்களில் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த நிகழ்ச்சிகளில் இருதரப்பு மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது குறித்து அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் கூறியதாவது:-
நான் இன்று (அதாவது நேற்று) சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தேன். அப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பயனுள்ள ஆலோசனைகள் செயப்பட்டது.
மேலும் அமீரகத்தின் ஓத்துழைப்பில் இரு நாடுகளுக்கு இடையே விரிவான கூட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நேர்மறையான இலக்குகளை அடைய தொடர்புகளை வலுப்படுத்தவும், கிடைக்க கூடிய அனைத்து வாய்ப்புகளிலும் இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கவும் அமீரகம் சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.