சார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில்; புதிய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவனுக்கு சிறப்பான வரவேற்பு
சார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில் புதிய துணைத் தூதர் சதீஷ் குமார் சிவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்
சார்ஜா,
துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களுக்கான இந்திய துணைத் தூதரகத்தின் புதிய துணைத் தூதராக சதீஷ் குமார் சிவன் சமீபத்தில் பொறுப்பேற்றார். தொடர்ந்து அவரை இந்திய வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளும் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சார்ஜா இந்திய பள்ளிக்கூடம் சார்ஜா பகுதியில் இந்திய மக்களின் குழந்தைகள் பள்ளிக்கூட படிப்பை படிப்பதற்காக இந்திய சங்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி நிறுவனம் ஆகும். இந்த பள்ளிக்கூடம் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக பள்ளிக்கூடங்களை நிர்வகித்து வருகிறது.
சார்ஜா இந்திய பள்ளிக்கூடத்தில் புதிய இந்திய துணைத் சதீஷ் குமார் சிவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் துணைத் தூதருக்கு மாணவ, மாணவிகள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
தொடர்ந்து பள்ளிக்கூட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் சதீஷ் குமார் சிவன் நட்டார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது, "ஒவ்வொருவரும் நல்ல முறையில் படித்து சிறந்த குடிமகனாக திகழ வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு எல்லாவிதமான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இத்தகைய சிறப்பான உள்கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள நிர்வாகத்துக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இந்திய சங்க நிர்வாகிகள், பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சார்ஜா இந்திய சங்க தலைவர் வழக்கறிஞர் ரஹீம் தலைமையில் அதன் நிர்வாகிகள் இந்திய துணைத் சதீஷ் குமார் சிவனுக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது துணைத் தூதர் பேசும்போது, "இந்திய-அமீரக உறவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதற்கு பாராட்டுகிறேன். சார்ஜா பகுதியில் இந்திய சமூகத்தினருக்கு தேவையான பணிகளை சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய துணை தூதரகம் எல்லாவிதமான ஒத்துழைப்பையும் வழங்கும்" என்றார்.
சார்ஜா பகுதியில் இந்து சமூகத்தினரின் சடலங்களை எரியூட்ட மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தகன மையத்தை மாநகராட்சி அதிகாரியுடன் இணைந்து துணைத் சதீஷ் குமார் சிவன் திறந்து வைத்தார்.