பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவி: துபாய் சார்பில் 7,500 நிவாரண தொகுப்பு சேகரிப்பு

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு அனுப்ப அமீரகம் சார்பில் 7 ஆயிரத்து 500 நிவாரண தொகுப்புகள் சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணிகளை துபாய் கலாசாரம், கலை ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2023-10-22 19:00 GMT

துபாய்,

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடர்ந்து போர் நடந்து வருவதால் காசா பகுதியில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு அமீரக அரசு சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு உதவ `காசாவுக்கான கருணை' என்ற திட்டம் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

கடும் போர் சூழ்நிலையால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினரை இழந்து, உடைமைகளை இழந்து, காயங்களுடனும், தண்ணீர், உணவு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கவனத்தில் கொண்டு அமீரக செம்பிறை சங்கம் வழிகாட்டுதலில் பல்வேறு பகுதிகளில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஐ.நா.வின் உலக உணவு திட்டம், அமீரக வெளியுறவுத்துறை மற்றும் அமீரக சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் கண்காணிப்பில் 20 தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காசாவுக்கான கருணை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உணவு, உடை, அத்தியாவசிய மருந்துகள் என பல்வேறு நிவாரண பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்ப துபாயில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதில் சேன்ட் கேஸ்டில் அரங்கில் அமைக்கப்பட்ட சேகரிப்பு முகாமில் அத்தியாவசிய நிவாரண பொருட்கள் சேகரிப்பு நடந்தது. இதில் துபாய் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்து 600 தன்னார்வலர்கள் பங்கேற்று அத்தியாவசிய பொருட்களை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மொத்தம் 7 ஆயிரத்து 500 நிவாரண தொகுப்புகளை தன்னார்வலர்கள் அட்டை பெட்டியில் பேக்கிங் செய்தனர். இந்த பொருட்கள் அனைத்தும் அட்டை பெட்டியில் சேகரிக்கப்பட்டு விமானங்கள் மூலம் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும் வகையில் அமீரக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணிகளை துபாய் கலாசாரம் மற்றும் கலை ஆணையத்தின் தலைவர் ஷேக்கா லத்திபா பிந்த் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் தன்னார்வலர்களை சந்தித்து அவர்கள் செய்து வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு ஆர்வத்துடன் பங்கேற்ற சிறுவர், சிறுமிகளை வெகுவாக பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் பொது இயக்குனர் ஹெஸ்சா பிந்த் ஈசா புஹுமைத் உள்ளிட்ட முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்