துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.;
துபாய்,
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பஸ், டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.
இது குறித்து துபாயில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் செயல்படும் துபாய் டாக்சி கார்ப்பரேசனின் செயல்பாட்டுத்துறை இயக்குனர் அம்மார் அல் புரைக்கி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் நவீன ஸ்மார்ட் தொழில்நுட்பம் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் 7 ஆயிரத்து 200 வாகனங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்க முடியும். இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக பஸ், டாக்சி உள்ளிட்டவைகளை இயக்கும் 14 ஆயிரத்து 500 டிரைவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் 400 சொகுசு வாகனங்கள், 1,000 பள்ளிக்கூட பஸ்கள், 600 டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் கண்காணிக்கப்படுகிறது. பள்ளிக்கூட பஸ்களை பொறுத்தவரையில் 1,000 பஸ்களில் மாணவர்கள் சரியாக ஏற்றி செல்லப்பட்டு மீண்டும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதி செய்வதாக உள்ளது. இதில் டிரைவர்கள் ஏதேனும் தங்கள் நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால் உதாரணமாக வேலை நேரத்தில் சரியாக செயல்படாதது தெரிய வந்தால் உடனடியாக எச்சரிக்கை செய்யும் வகையில் தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 5 ஆயிரத்து 200 டாக்சி வாகனங்களின் டிரைவர்கள் நாள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் டாக்சி தேவைப்படும் பகுதிகளுக்கு செல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவும் இந்த தொழிழ்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செயல்படுகிறது. மேலும் டிரைவர்களின் செயல்பாடுகள் குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.