இந்தியாவில் முகலாயர்கள் பயன்படுத்திய உயர் ரக ஆபரணங்கள் கண்காட்சி; 25-ம் தேதி தொடங்குகிறது

சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தில் இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக ஆபரணங்கள் கண்காட்சி வருகிற 25-ம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகத்தின் பொது இயக்குனர் ஆயிஷா ராஷித் டீமாஸ் கூறியதாவது:-

Update: 2023-10-21 19:00 GMT

சார்ஜா,

சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகம் கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமியால் தொடங்கி வைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய அருங்காட்சியகம் புதிய இடத்தில் சார்ஜா இஸ்லாமிய நாகரிக அருங்காட்சியகம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

இங்கு இஸ்லாமிய நாகரித்தின் பழமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கொண்டு வரப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணையங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 7 பிரிவுகளில் உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரிய பல பொருட்கள் கொண்டு வரப்பட்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு குவைத்தில் உள்ள தார் அல் அத்தார் அல் இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து இந்தியாவில் முகலாயர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட உயர் ரக ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் கொண்ட சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 25-ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு 2024 ஏப்ரல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த பொருட்கள் அனைத்தும் குவைத்தின் மறைந்த ஷேக் நாசர் சபா அல் அகமது அல் சபா மற்றும் ஷேக் ஹெஸ்ஸா சபா அல் சலேம் அல் சபா ஆகியோர் சேகரித்து வைத்தவைகள்.

இதில் தைமூர் ஆட்சியாளர் உலுக் பெக், அவரது பேரன் அமிர் தைமூர் ஆகியோரது பெயர்களுடன் கூடிய ரத்தினங்கள் உள்ளிட்ட அரியவகை ஆபரணங்கள் கொண்ட வாள், முகலாயப் பேரரசின் ஷாஜஹான் 1637 மற்றும் 1638-ம் ஆண்டுகளில் பயன்படுத்திய பதக்கம், மோதிரம், கோடாரி உள்ளிட்ட 84 வகையான அரிய பல பொருட்கள் இதில் உள்ளன. இவை இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் முகலாய அரசர்களின் சிறப்புக்களை வெளிப்படுத்துக்கூடிய வகையில் இருக்கிறது.

இதனை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பார்வையிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்