அமீரக சட்ட ஆலோசனை

வாசகர்களின் சட்டரீதியான கேள்விகளுக்கு வழக்கறிஞர்கள் அஜி குரியாகோஸ், கண்மணி நவீன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.

Update: 2023-10-20 13:00 GMT

ஜாஹிர் ஹுசைன், (துபாய்):- ஐயா, நான் துபாயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தேன். சமீபத்தில் நான் குடியிருப்பை காலி செய்து வேறு பகுதிக்கு சென்றேன். இதில் நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் எனது டெபாசிட் தொகையில் குறிப்பிடத்தக்க அளவு கழித்துக்கொண்டு மீதம் கொடுத்தார். இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதா? இதனை நான் எப்படி விளக்கம் கோருவது? தயவு செய்து ஆலோசனை கூறவும்.

வழக்கறிஞர் பதில்:- துபாய் வாடகை சட்டம் 2020, எண் 33-ன்படி, வாடகை ஒப்பந்தத்தை செய்துகொள்ளும்போது சொத்து பராமரிப்புக்காக வாடகைதாரரிடம் இருந்து வீட்டின் உரிமையாளர் பாதுகாப்பு வைப்பு தொகையை (செக்கியூரிட்டி டெபாசிட்) வாங்கலாம். ஒப்பந்த காலம் முடிந்ததும் முழு வைப்புத்தொகை அல்லது மீதமுள்ள வைப்பு தொகையை பராமரிப்பு செலவை கழித்து வாடகைதாரருக்கு வீட்டின் உரிமையாளர் தரலாம். வசிப்பவரின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட கட்டிட சேதம், தேய்மானம் மற்றும் நியாயமான சேதாரங்கள் தவிர வாடகைக்கு எடுக்கப்பட்ட சொத்தை எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பயன்படுத்த வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்திலேயே பிரச்சினையை சுமுகமாக தீர்க்க ஆதாரங்களை வழங்கி வாடகைதாரர் வீட்டின் உரிமையாளரிடம் விலக்கு அளிக்க வேண்டிய தொகை குறித்து ஆலோசனை செய்யலாம். அதேபோல் பாதுகாப்பு வைப்புத்தொகையில் விலக்கு அளிப்பது குறித்த பிரச்சினைகள் இருந்தால் துபாய் வாடகை தகராறு மையத்தில் (ஆர்.டி.சி) வீட்டின் உரிமையாளருக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்யலாம். எப்படி இருந்தாலும் வாடகைதாரர் வீட்டின் உரிமையாளரிடம் குடியிருப்பை ஒப்படைக்கும்போது நல்ல நிலையில் அளிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை வைத்திருப்பது அவசியமாகும்.

வெங்கடேசன்:- ஐயா, நான் தமிழ்நாட்டில் வசித்து வருகிறேன். தற்போது நான் அமீரகத்துக்கு வருவதற்கு முடிவு செய்துள்ளேன். இதில் அப்சே செயலி (Afseh app) குறித்து கேள்விப்பட்டு உள்ளேன். நான் ஏன் இதனை பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும், அமீரகத்துக்கு செல்லும்போது இதனை பயன்படுத்துவதன் முக்கிய நோக்கம் என்ன? என்பது குறித்தும் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.

வழக்கறிஞர் பதில்:- நிச்சயமாக, அமீரகத்துக்கு உங்கள் பயணத்தை திட்டமிடும்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய தேவையாக இந்த அப்சே செயலி உள்ளது. அப்சே செயலியின் முக்கிய நோக்கமானது நீங்கள் வைத்திருக்கும் ரொக்கம், விலைமதிப்பற்ற உலோகங்கள், ரத்தின கற்கள் அல்லது 60 ஆயிரம் திர்ஹாமுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்கள் உள்ளிட்ட கணிசமான சொத்துக்களை நீங்கள் அறிவிக்க பயன்படுவதாகும். இதில் நீங்கள் அமீரகத்தில் வசிப்பவரா? அல்லது வருகை தரும் சுற்றுலா பயணியா? என்ற பாகுபாடின்றி அனைத்து பயணிகளுக்கும் இந்த கடமை பொருந்தும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். மேலும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அல்லது தரை வழிப்பாதை வழியாக அமீரக எல்லைகளுக்குள் செல்லும்போது இது கட்டாய நடைமுறையாகும். நிதி வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பண மோசடி போன்ற சட்ட விரோத நிதி நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவதும் இதன் பின்னணியில் உள்ள அடிப்படை காரணமாகும். அமீரக அரசு சட்டவிரோத பண மோசடி நடைமுறைகளுக்கு எதிராக செயல்படுவதையும், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் இந்த நடைமுறை உள்ளது.

இந்த அப்சே செயலி குறிப்பிடத்தக்க வகையில் நெறிப்படுத்திய தகவல்களை பயணிகளுக்கு வழங்குவதோடு எளிதில் கையாளக்கூடிய தளத்தை கொண்டுள்ளது. நீங்கள் அமீரகத்தில் நுழையும்போது அல்லது வெளியேறும்போது அறிவிக்கப்பட்ட மதிப்புகளில் மாற்றங்கள் இருந்தால் எளிதாக பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் அளவு அல்லது மதிப்பை எளிதாக அறிவிக்கலாம். அப்சே செயலி மூலம் பதிவு செய்து கொண்டு தகவல்களை சமர்ப்பித்த பிறகு எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் மூலமாக க்யூ.ஆர் கோட் அனுப்பப்படும். இந்த க்யூ.ஆர் குறியீடு விமான நிலையங்கள் அல்லது எல்லை சோதனை சாவடிகளில் சுங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படக்கூடிய ஆவணமாக செயல்படும். இந்த நடைமுறை மிக மென்மையான, சிக்கலற்ற செயல்முறையை உறுதி செய்கிறது. அமீரக மத்திய அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து அப்சே செயலி மூலம் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவலை நீங்கள் வழங்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த பிரச்சினையையும் சந்திக்காமல் நாணய பரிமாற்றத்தை செய்து கொள்ளலாம்.

Tags:    

மேலும் செய்திகள்