அமீரக அதிபருடன் கனடா வெளியுறவு மந்திரி சந்திப்பு

காசாவில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்து அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை கனடா நாட்டின் வெளியுறவு மந்திரி மெலனி ஜோலி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-10-25 21:00 GMT

அபுதாபி,

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில் அதற்கான நிரந்தர தீர்வு காண்பதற்கு அமீரகம் தீவிரமாக முயன்று வருகிறது. தொடர்ந்து அரசு தரப்பில் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தொடர்ந்து உலக தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக மனிதாபிமான நெருக்கடி நிலையை தவிர்க்க அவர் விடுத்த அழைப்பை ஏற்று கனடா நாட்டின் வெளியுறவு மந்திரி மெலனி ஜோலி அமீரகம் வந்தார்.

ஆலோசனை

அபுதாபியில் அல் பஹர் அரண்மனையில் அவர் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக காசாவில் இருந்து வரும் நெருக்கடி நிலையில் பொதுமக்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் அதற்கான வழிமுறைகள் குறித்து அமீரக அதிபர் அவரிடம் உரையாடினார். பேச்சுவார்த்தையின் முடிவில் இருதரப்பிலும் பயங்கரவாதம், பதற்றம் மற்றும் வன்முறைகளை ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான், அமீரக வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் பிரதேச பொறுப்பாளர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்