சார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் அரேபியா விமான பயணிகளுக்கு தானியங்கி சுய சேவை அறிமுகம்

சார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் ஏர் அரேபியா விமான பயணிகளுக்கு தானியங்கி சுய சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-10-25 21:00 GMT

சார்ஜா,

சார்ஜா சர்வதேச விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அதிக அளவில் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையிலும், துரிதமாக சேவை வழங்கவும் ஸ்மார்ட் முறையிலான தானியங்கி சுய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது ஏர் அரேபியா விமானங்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் இந்த சேவை அளிக்கப்படுகிறது.

இந்த முறையில் பயணிகள் தங்கள் உடைமைகளை அளிக்க தங்களது பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து பி.என்.ஆர் எண்ணை தானியங்கி எந்திரத்தில் பதிவு செய்தால் போதும். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக போர்டிங் பாஸ் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும் உடைமைகளுக்கான ஸ்டிக்கரும் (பேக் டேக்) எந்திரத்தின் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். பின்னர், உடமைகளை அந்த ஸ்டிக்கரை ஒட்டி சுய சேவை கவுண்ட்டரில் வைத்து விட்டு செல்லலாம். அதற்கு அடுத்தபடியாக குடியேற்ற பிரிவு சோதனையில் தானியங்கி ஸ்மார்ட் கேட் வழியாக பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து உள்ளே நுழையலாம்.

இந்த சேவை குடியிருப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களை தெரிவிக்க விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஸ்மார்ட் தகவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள டிஜிட்டல் திரையில் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்பு கொள்ளவும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவிலான பயணிகள் வருகையை கையாள எளிதாக உள்ளது. மேலும் குறைந்த நேரத்தில் எளிதாக பயணிகள் தங்கள் விமான பயணங்களை மேற்கொள்ளவும் உதவியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்