மது குடிக்க பணம் தராததால் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;
சென்னை,
சென்னை காசிமேடு இந்திராநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் மதி (வயது 56). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி தேசம். இவர், உணவகம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஆனஸ்ட்ராஜ், அஜித்குமார் என்ற மகன்களும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர். மதி, வேலைக்கு செல்லாமல் மது குடிப்பதற்காக அவ்வப்போது தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 11.4.2017 அன்று மதி, மது குடிக்க பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த மதி, மனைவி தேசத்தை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆரத்தி ஆஜராகி வாதாடினார்.
வழக்கு விசாரணையின் போது தந்தைக்கு எதிராக 2 மகன்களும், மகளும் சாட்சியம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மதியின் மகன்கள், மகளுக்கு அபராத தொகையில் தலா ரூ.4 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.