பழனியில் பங்குனி உத்திர திருவிழா: 5-ம் தேதி கொடியேற்றம்

பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.;

Update:2025-03-31 15:20 IST
பழனியில் பங்குனி உத்திர திருவிழா: 5-ம்  தேதி கொடியேற்றம்

பழனி:

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து மலைக்கோவில் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு அம்சமாகும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருஆவினன்குடி கோவிலில் காலை 11 மணிக்கு மேல் நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி தங்க குதிரை வாகனம், தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினமும் இரவு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஏப்ரல் 10-ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மன், திருமுருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 11-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு தேர் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிரி வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவாக ஏப்ரல் 11-ந் தேதி இரவு தங்க குதிரை வாகனத்தில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெறும். பங்குனி உத்திரம் தொடங்க உள்ள நிலையில் பக்தர்கள் விரதம் இருந்து தீர்த்தக் காவடி எடுக்க தயாராகி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்