கந்த சஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 2-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

7-ந் தேதி முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

Update: 2024-10-23 10:11 GMT

மதுரை,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா வருகிற 2-ந் தேதி தொடங்கி 8-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முதல் நாளான 2-ந்தேதி காலை 8.45 மணியளவில் கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும்.

தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப் பெருமானுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். இதையடுத்து கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடைபெறும். திருவிழாவையொட்டி விசாக கொறடு மண்டபத்தில் தினமும் காலையில் ஒரு வேளை யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.

உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு தினமும் அலங்காரம் செய்யப்படும். சண்முகர் சன்னதியில் காலை 11 மணிக்கும், மாலை 5 மணிக்குமாக இரு வேளையில் சண்முகார்ச்சனை நடக்கிறது. தினமும் ஒரு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான் எழுந்தருள்கிறார். இதற்கிடையில் தினமும் மாலை 6.30 மணி அளவில் உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

முக்கிய நிகழ்ச்சியாக 6-ந் தேதி கம்பத்தடி மண்டப வளாகத்தில் கோவில் பணியாளர்கள் திருக்கண்ணில் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சத்தியகிரீஸ்வரர் முன்னிலையில் முருகப்பெருமான் தனது தாயான கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து சக்திவேல் பெறுதல் நடைபெறும். 7-ந் தேதி மாலை 6 மணியளவில் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பாக முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

8-ந் தேதி காலையில் தங்கமயில் வாகனத்துடன் சட்டத்தேரில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி கிரிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறும். விரதம் இருந்த பக்தர்கள் சட்டத்தேரின் வடம் பிடித்து கிரிவலம் வந்து தரிசனம் செய்ய உள்ளனர். அன்று மாலை 4 மணிக்கு மேல் பாவாடை தரிசனம் மற்றும் கோவிலின் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவித்தல் நடக்கிறது.

கோவிலின் கருவறையில் உள்ள கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், விநாயகர் துர்க்கை அம்பாள் ஆகிய விக்கிரகங்களுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படி செய்யப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்