திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் அதிக அளவில் குவிந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்-உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ராஜகோபுரம் நுழைவு வாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.