முடியும் வரை முயற்சி செய் - சரண்யா
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு ‘பரதத் தேரில் பாரதி உலா' என்ற நிகழ்ச்சி மூலமாக மகாகவி பாரதியாரின் பல பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஆடி நிதித் திரட்ட உதவினேன். பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கும், கலை பயில ஆர்வம் இருந்தும் பணவசதியில்லாத மாணவர்களுக்கும் இலவசமாக கலைகளைப் பயிற்றுவித்து வருகிறேன்.;
"பாரத நாட்டின் அடையாளமான பரதக் கலையை என்னால் இயன்றவரை உலகம் முழுவதும் பரவச் செய்ய வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இலவசமாக கலைகளைக் கற்பிக்க வேண்டும். எனது கலையின் மூலம் நிதி திரட்டி, சமூகத்துக்கு உதவ வேண்டும்" என்று தன் மனதில் இருக்கும் ஆசைகளை பட்டியலிடுகிறார் சரண்யா சாய் பிரசாந்த்.
பரதநாட்டியக் கலைஞரும், கர்நாடகப் பாடகியுமான இவர், உள் நாட்டில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஏ.ஆர். ரகுமான் இசையில் 'வந்தே மாதரம்' ஆல்பத்திலும் நடனமாடியிருக்கிறார். இவரது மாணவர்கள் பலர் பிரபல நடனக் கலைஞர்களாக உள்ளனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த சரண்யா பரதநாட்டியம், மனிதவள மேம்பாடு, இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
"வாழ்க்கையின் எல்லா படிநிலைகளிலும், முடியும் வரை முயற்சி செய்; முடியாவிட்டால் பயிற்சி செய்' என்பதே தனது தாரக மந்திரமாக அமைந்தது" என்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
"பரதநாட்டியம் மட்டுமின்றி, கர்நாடக சங்கீதம், வீணை வாசித்தலையும் முறையாக பயின்றிருக்கிறேன். இவற்றில் மாணவர்களுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறேன். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறேன். எனது கணவர் சாய் பிரசாந்த் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகன் அபிநவ் பள்ளியில் படித்து வருகிறார்."
பரதநாட்டியக் கலைஞராக உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
சிறு வயதில் இருந்தே கலைமாமணி ரங்கநாயகி ஜெயராமனிடம் பரதம் பயின்றேன். நாங்கள் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். ஏ.ஆர். ரகுமானின் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் பரதம் ஆடியிருக்கிறேன். கம்போடியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் எனது குழுவினருடன் சிலப்பதிகாரம் நாட்டிய நாடகத்தை நடத்தினோம். அண்மையில் தமிழக முதல்-அமைச்சரின் திருக்குறள் நிகழ்ச்சியில் நடனமாடினோம்.
கர்நாடக இசைக் கலைஞராக உங்களது அனுபவங்கள் என்ன?
பல கச்சேரிகளில் பாடியிருக்கிறேன். நான் பாடிய 'கர்ப்ப ரக்ஷாம்பிகை' பாடல்கள் குறுந்தகடுகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'ஆஞ்சநேயர் கவசம்' என்ற பாடல் தொகுப்புகள் அடங்கிய குறுந்தகடு மலேசியாவில் வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் செண்டோஸா தீவுக்கு விளம்பரப் பாடலை பாடியிருக்கிறேன்.
எனது கலைப் பள்ளியில் இதுவரை சில ஆயிரம் மாணவர்கள் பயின்றிருக்கிறார்கள். அவர்கள் சர்வதேச அளவிலான நடனப் போட்டிகளில் ஜூனியர், சீனியர், சப்-ஜூனியர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதற்காக எனக்கு 'ஆடல் கலை அரசி' என்ற பட்டத்தை வழங்கினார்கள். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நானும், எனது மாணவர்களும் நடனமாடியிருக்கிறோம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக உங்களின் அனுபவங்கள் எப்படி?
பல ஆண்டுகளாகப் பல்வேறு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறேன். 'சாதனைப் பெண்கள்' வரிசையில், பின்னணிப் பாடகி சித்ரா, நடிகை மனோரமா, எழுத்தாளர்கள் சிவசங்கரி, அனுராதா ரமணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளைப் பேட்டி எடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி செய்யும் பெண்ணை பேட்டி எடுத்தது மறக்க முடியாத நிகழ்வு. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிடித்த 'தேன் கிண்ணம்' நிகழ்ச்சியைத் தனியார் டெலிவிஷனில் தொகுத்து வழங்கினேன். ஏ.ஆர்.ரகுமானை பேட்டி எடுத்தது எனது வாழ்க்கையில் மற்றொரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
சமூக சேவையில் உங்களின் பங்களிப்பு பற்றி?
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 'பரதத் தேரில் பாரதி உலா' என்ற நிகழ்ச்சி மூலமாக மகாகவி பாரதியாரின் பல பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஆடி நிதித் திரட்ட உதவினேன். பிறவிக் குறைபாடுடைய குழந்தைகளுக்கும், கலை பயில ஆர்வம் இருந்தும் பணவசதியில்லாத மாணவர்களுக்கும் இலவசமாக கலைகளைப் பயிற்றுவித்து வருகிறேன்.
கலைத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?
ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருக்கும். அதை நாம் புரிந்து கொண்டு வெளிக்கொண்டு வர வேண்டும். 'முடியும் வரை முயற்சி செய், முடியாவிட்டால் பயிற்சி செய்' என்று நான் கடைப்பிடிக்கும் மந்திரச் சொற்களையே கலைத்துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறு கூறிய சரண்யா, நடன நிகழ்ச்சிகளுக்காகவும், சமூகத்திற்கு செய்த சேவைகளுக்காகவும் நாட்டியத் திலகம், நாட்டியக்கலைச் சிகரம், நாட்டிய மயூரி, ஆடல் கலை அரசி போன்ற பல்வேறுபட்டங்களைப் பெற்றிருக்கிறார். அவரும், அவரது மாணவர்களும் 6 கின்னஸ் உலக சாதனைகளைச் செய்திருக்கிறார்கள்.