திறமைகளை வீணாக்காதீர்கள்- சரண்யா

எனது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் நானாகவே ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொண்டேன். எந்த தனிப்பட்ட வகுப்பிற்கும் சென்றது இல்லை. மனதிற்கு பிடித்ததை செய்வதில்தான் நமது வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கிறது என்று நம்புகிறேன்.;

Update:2023-04-30 07:00 IST

''உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஏதாவதொரு திறமை இருக்கும்.அவற்றை தங்களுக்குள்ளேயே புதைக்காமல், வெளிக்கொண்டு வந்தால் சாதிக்கவும், சம்பாதிக்கவும் முடியும்" என்கிறார் நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் சரண்யா. உருவப்படங்கள் வரைவதில் கைத்தேர்ந்த இவருடன் ஒரு சந்திப்பு.

"நான் ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், இதழியலில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறேன். சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக நேரம் செலவிடுவேன். பொழுதுபோக்கிற்காக பிடித்த நபர்களை ஓவியமாக வரைய ஆரம்பித்தேன். புகைபபடம் எடுப்பதிலும் ஆர்வம் இருப்பதால் அதையும் கற்று வருகிறேன்.

எனது சொந்த ஆர்வத்தின் அடிப்படையில் நானாகவே ஓவியம் வரைவதற்கு கற்றுக் கொண்டேன். எந்த தனிப்பட்ட வகுப்பிற்கும் சென்றது இல்லை. ஓவியம் வரைவதற்காக உபயோகிக்கும் கருவிகள் பற்றி ஆரம்பத்தில் நான் அறிந்தது இல்லை. கல்லூரி படிக்கும்போது ஓவிய போட்டிகளில் பங்கேற்கும் பலரும் 2பி முதல் 10பி, எச்.பி, சார்கோல் பென்சில் என பல பொருட்களை உபயோகிப்பதை பார்த்தேன். சக போட்டியாளர்கள் மற்றும் நண்பர்களிடம் அது பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். இணையம் வாயிலாகவும் ஓவியம் வரைதல் பற்றிய சில நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்.

கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு ஏற்பட்டதால் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. அதை ஓவியங்கள் வரைவதற்கு பயன்படுத்திக்கொண்டேன். அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டேன். அதைப் பார்த்த சிலர் தங்கள் புகைப்படங்களை அனுப்பி 'அதுபோல வரைந்து தர முடியுமா?' என கேட்டார்கள். அப்போது முதல் ஓவியங்கள் வரைவதன் மூலம் வருமானம் ஈட்ட ஆரம்பித்தேன்.

பென்சில் ஷேடிங், கிராபிக்ஸ், பெயர்கள் மூலம் ஓவியம் வரைவது, கிராஸ் ஹட்சிங், டூடுல் ஆர்ட், மண்டலா ஆர்ட், பெயிண்டிங் என வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப வரைந்து கொடுக்கிறேன்.

ஓவியம் வரைவதை முக்கிய தொழிலாக பலரும் கருதுவதில்லை. இதை பகுதிநேர தொழிலாக செய்யும்படி எனக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால், மனதிற்கு பிடித்ததை செய்வதில்தான் நமது வெற்றியும், சந்தோஷமும் அடங்கி இருக்கிறது என்று நம்புகிறேன். ஒருநாள் ஓவியத்தில் பெரிதாக சாதித்து என் பெற்றோரை பெருமைப்படுத்துவேன்.

ஓவியம் வரைவது மற்றும் புகைப்படம் எடுப்பது இரண்டிலும் சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. இரண்டிலும் எனக்கான தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவேன்" என்று தன்னம்பிக்கையோடு கூறி முடித்தார் சரண்யா.

Tags:    

மேலும் செய்திகள்