குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில்
பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.
வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அதற்கான கடன் உதவி, வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு வகையிலான திட்டங்களை அரசும், தனியார் அமைப்புகளும் உருவாக்கி, சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்கப்படுத்தி வருகின்றன.
எனினும், நாம் செய்யும் தொழிலின் தயாரிப்பும், உற்பத்திப் பொருளும் தனித்துவமாக இருந்தால் அதில் அதிக லாபம் பெற முடியும். அந்த வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் 'தென்னை நார் கால்மிதியடி தயாரிப்பு' தொழில் குறித்த விளக்கமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.
இது தவிர, நாம் உற்பத்தி செய்யும் பொருளின் சிறப்பம்சம் மற்றும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது. விலை குறைவானது. எளிதில் பயன்படுத்தக்கூடியது. மேலும், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் துணியால் செய்யப்பட்ட கால்மிதியடிகளை விட பாதுகாப்பானது, உடல் நலம் மற்றும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காது.
கால்மிதியடிகள் தயாரிக்க தேங்காய் நார், கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் மேட் தயாரிக்கும் இயந்திரம் தேவைப்படும். இதை இயக்குவது மிகவும் எளிதானது. அரசு மானியத்தின் மூலம் அல்லது சுயதொழில் கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி மூலமாக மானிய முறையில் இயந்திரம் வாங்கலாம். இந்த இயந்திரத்தில் முதலில் தேங்காய் நாரை கயிறாக திரிக்கும் வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி கயிறு திரித்து பின் அதை சீராக்கி, கால்மிதியாக தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒரு கிலோ தேங்காய் நாரில் 2 கால்மிதியடிகள் தயாரிக்கலாம். குறைந்த பட்சமாக ஒரு வாரத்தில் 100 கிலோ தேங்காய் நார் கொண்டு 200 கால்மிதியடிகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ தேங்காய் நாரின் இப்போதைய விலை 50 ரூபாய். ஆனால், நேரடியாக தென்னை சாகுபடி செய்பவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். தவிர, தயாரிப்பு செலவுகள் சேர்த்து ஒரு 'மேட்' தயாரிக்க சுமார் 70 ரூபாய் ஆகும்.
ஒரு மேட்டை 90 முதல் 120 ரூபாய் வீதம் நேரடியாக சந்தையில் விற்கலாம். அல்லது மொத்த விலைக் கடையில் பங்குதாரர் முறையில் விற்கலாம். ஆன்லைனில் தனியாகவும், மொத்தமாகவும் விற்கலாம்.