அசைவ ஊறுகாய் தயாரிப்பில் அசத்தும் சுதா

மற்றவற்றில் இருந்து என்னுடைய தயாரிப்பு மாறுபட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். எனவே இறால், சிக்கன், மீன் ஊறுகாய் போன்றவற்றை தனித்தன்மை வாய்ந்த சுவையுடன் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறேன்.;

Update:2022-11-20 07:00 IST

ல நூற்றாண்டுகளாகவே நமது உணவு முறையில் ஊறுகாய் இடம்பிடித்து வருகிறது. விதவிதமான பதார்த்தங்கள் இருந்தாலும், சிறிது ஊறுகாய் வைத்து சாப்பிட்டால்தான் பலருக்கு உணவு திருப்திஅளிக்கும். சைவம், அசைவம் என பலவகையான ஊறுகாய்கள் தற்போது கிடைக்கின்றன. அவற்றில் அசைவ ஊறுகாய் தயாரிப்பில் அசத்தி வருகிறார், சென்னை முகப்பேரைச் சேர்ந்த சுதா அசோகன்.

அவருடன் நடத்திய உரையாடல்.

ஊறுகாய் தயாரிப்பை தொழிலாகத் தொடங்கியது எப்படி?

எனது பாட்டி ஊறுகாய் தயாரிப்பில் கைத்தேர்ந்தவர். அவர் ஊறுகாய் தயாரிப்பதை சிறுவயதில் இருந்தே கவனித்து வந்தேன். படிப்பை முடித்த பிறகு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். இருந்தாலும் என்னுடைய மனதுக்குள் சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்து, பாட்டி செய்யும் ஊறுகாய் தயாரிப்பையே தொழிலாகத் தொடங்கினேன்.

ஊறுகாய் தயாரிப்பில் நீங்கள் என்ன புதுமையைப் புகுத்தி உள்ளீர்கள்?

இதற்கு முன்பு சந்தையில் என்னென்ன வகையான ஊறுகாய்கள் கிடைக்கின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை வாங்கி, சுவைத்து பார்த்தேன். மற்றவற்றில் இருந்து என்னுடைய தயாரிப்பு மாறுபட்ட வகையில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். எனவே இறால், சிக்கன், மீன் ஊறுகாய் போன்றவற்றை தனித்தன்மை வாய்ந்த சுவையுடன் பாரம்பரிய முறைப்படி தயாரிக்கிறேன்.

அசைவ ஊறுகாய்கள் மட்டுமில்லாமல் தக்காளி, நார்த்தங்காய் போன்ற வழக்கமான தொக்குளைத் தாண்டி வாழைத்தண்டு, வாழைப்பூ, பிரண்டை போன்றவற்றிலும் தொக்குகள் தயாரிக்கிறேன். இவ்வாறு சைவ வகைகளில் மட்டும் 15 தயாரிப்புகள் இப்போது உள்ளன.

இதுதவிர தாமரைப்பூ விதை, முருங்கை விதை, வாழைப்பூ, வாழைத்தண்டு போன்றவற்றை கொண்டு இட்லிப்பொடிகளையும் தயார் செய்கிறேன்.

இதில் வருமானம் எந்த வகையில் உள்ளது?

ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொடங்கினேன். அதில் இருந்து கிடைத்த லாபத்தில் எடை போடும் இயந்திரம், பேக்கிங் செய்யும் இயந்திரம் போன்றவற்றை வாங்கினேன். தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்குவதால் குறைந்த விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுக்கும்போதே பணத்தையும் கொடுத்து விடுகின்றனர். இதனால் வரவு செலவுகளை எளிதாக சமாளிக்க முடிகிறது.

உங்களைப் போல தொழில் தொடங்குபவர்களுக்கு உங்கள் ஆலோசனை?

எந்தத் தொழிலிலும் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை முக்கியமானது. எதையும் ஒழுங்காகச் செய்தால் வெற்றி நிச்சயம். சிறு சிறு தோல்விகளை கண்டு கலங்கி விடாமல் தொடர்ந்து இயங்க வேண்டும்.

ஊறுகாயை எத்தனை நாட்களுக்கு கெடாமல் பயன்படுத்த முடியும்?

ஊறுகாயின் வகை மற்றும் பயன்பாட்டைப் பொறுத்து அதன் ஆயுளை தீர்மானிக்கலாம். சைவ ஊறுகாய்களை ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும். அசைவ ஊறுகாய்களை குளிர்சாதனப் பெட்டி அல்லது குளிர்ந்த இடங்களில் சேமித்து வைத்தால் 3-4 மாதங்கள் நீடிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்