உந்தியு
குஜராத் மாநிலத்தின் பிரபலமான உணவு வகையான உந்தியு-வின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்;
குஜராத் மாநிலம், சூரத் நகரில் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் கொண்டு தயாரிக்கப்படும் 'உந்தியு' எனும் உணவு பிரபலமானது. பண்டிகை நாட்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் உந்தியுவுக்கு முதலிடம் உண்டு. அதன் செய்முறை இதோ...
தேவையான பொருட்கள்:
உருண்டைக்கு:
கடலைமாவு - 1 கப்
வெந்தயக்கீரை - 1½ கப்
மிளகாய்த்தூள் - ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1½ டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
மசாலாவுக்கு:
தேங்காய் (துருவியது) - ¼ கப்
வறுத்த நிலக்கடலை (பொடித்தது) - ½ கப்
வெள்ளை எள் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை
(பொடிதாக நறுக்கியது) - ¼ கப்
பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு
விழுது - ½ டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - ½ டீஸ்பூன்
காய்கறி கலவைக்கு:
கத்தரிக்காய் (சிறியது) - 3
உருளைக்கிழங்கு (சிறியது) - 6
சேனைக்கிழங்கு - ½ கப் (சிறு
துண்டுகளாக நறுக்கியது)
மொச்சைக்கொட்டை - ½ கப்
துவரை பயறு - ½ கப்
பச்சைப் பட்டாணி - ½ கப்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - ½ கப் (சிறு துண்டு
களாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - ¼ டீஸ்பூன்
தனியா தூள் - ¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ கப்
தண்ணீர் - 1 கப்
செய்முறை:
உருண்டை தயாரிப்பு:
கடலைமாவு, வெந்தயக்கீரை, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பேக்கிங் சோடா, சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசையவும். பின்னர் அதை சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த உருண்டைகளை அதில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
மசாலா தயாரிப்பு:
தேங்காய், கொத்தமல்லி, நிலக்கடலை பொடி, எள், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும்.
காய்கறி கலவை:
கத்திரிக்காயையும், உருளைக்கிழங்கையும் நெடுக்காக வெட்டி, அதன் நடுவில் தயாரித்து வைத்திருக்கும் மசாலாவை நிரப்ப வேண்டும். பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா நிரப்பிய கத்தரிக்காய், உருளைகிழங்குப் போட்டு வதக்கவும். சில நிமிடங்கள் கழித்து அதில் சேனைக்கிழங்கு, மொச்சைக்கொட்டை, துவரை பயறு, பச்சைப் பட்டாணி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவற்றை போட்டு வதக்கவும். பின்பு மீதமிருக்கும் மசாலா, உப்பு ஆகியவற்றை காய்கறி கலவையுடன் சேர்த்து கலந்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்தவுடன், அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், தனியாத்தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் வரை வதக்கவும். பிறகு அதில் உருண்டைகளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.