உடலைக் குளிர்விக்கும் தென்னம்பூ லேகியம்

உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Update: 2022-08-28 01:30 GMT

தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய் போன்றவை உடலுக்கு நலம் சேர்க்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தென்னையின் பூவும் உடல் ஆரோக்கியத்துக்கு பல நன்மைகளைத் தரக்கூடியது. இது துவர்ப்புத் தன்மை கொண்டது. உடல் வெப்பத்தைப் போக்கி குளுமையாக்கும். சிறுநீரைப் பெருக்கும். ரத்த பேதி, சீதபேதி, நீர்ச்சுருக்கு, வயிற்று கடுப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கும்.

தென்னம்பூவைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள், அதிக ரத்தப்போக்கு மற்றும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் தீரும். பிரசவித்த பெண்களின் உடல் சோர்வை நீக்கி வலுவாக்கும். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் தென்னம்பூவைக்கொண்டு லேகியம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தென்னம்பூ (பெரியது) - 1

நாட்டு சர்க்கரை - 2 கிலோ

ஓமம் - 50 கிராம்

சதுப்பா - சிறிதளவு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)

சீரகம் - 50 கிராம்

வெள்ளை கடுகு - 50 கிராம்

கறுப்பு கடுகு - 50 கிராம்

சிவப்பு அரிசி - 50 கிராம்

வெந்தயம் - 50 கிராம்

நல்லெண்ணெய் - 100 மில்லி

தேங்காய் - 3

ஜாதிக்காய் - 2

கடுக்காய் - 2

மஞ்சள் கிழங்கு - 2 துண்டு

சாலி விதை - 50 கிராம்

நெய் - 100 கிராம்

செய்முறை:

தேங்காய்களை அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

ஓமம், சீரகம், வெள்ளைக்கடுகு, கறுப்பு கடுகு, சிவப்பு அரிசி, வெந்தயம், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் தென்னம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பெரிய கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.

பின்னர் பொடித்த நாட்டுச் சர்க்கரையை அதில் கலக்கவும். இப்போது தேங்காய்ப் பால் ஊற்றி மீண்டும் கிளறவும். கலவை சுருண்டு வரும்போது அதில் நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசியாக தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த 50 கிராம் சாலி விதைகளைக் இந்தக் கலவையுடன் சேர்க்க வேண்டும்.

இறுதியாக கலவையில் இருந்து எண்ணெய் பிரியும். கலவை கையில் ஒட்டாமல் வருவதுதான் சரியான பதம். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திப் பயன்படுத்தலாம். உணவுக்குப் பிறகு இந்த லேகியத்தை சாப்பிடலாம்.

இந்த லேகியத்தை பெரிய கடாயில் தயாரிப்பதுதான் பாதுகாப்பானது. இல்லையெனில் அடுப்பில் வைத்துக் கிளறும்போது சிதறும். 

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ