சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா

சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா, மலேஷியா ஸ்பெஷல் ஜாலர் ஆப்பம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்

Update: 2023-06-04 01:30 GMT

ர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 500 கிராம்

நெய் - 8 தேக்கரண்டி

முந்திரி - சிறிதளவு

உலர்ந்த திராட்சை - சிறிதளவு

ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்

வெல்லம் - 150 கிராம்

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்குகளை நன்றாக சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பின்னர் அவற்றை இட்லியைப்போல ஆவியில் வேக வைக்கவும். கிழங்குகள் ஆறியதும் அவற்றின் மேல் தோலை நீக்கி நன்றாக மசித்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 6 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர், மசித்து வைத்திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அதனுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும். 5 நிமிடங்கள் கழித்து, தூளாக்கப்பட்ட வெல்லத்தை அதில் கொட்டி கிளறவும். வெல்லம் கரைந்து கிழங்குடன் சேர ஆரம்பிக்கும்போது, அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்றாகக் கிளறவும்.

சிறிது நேரத்தில், கிழங்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும். இந்த பதத்தில் அடுப்பை அணைத்துவிட்டு, 2 தேக்கரண்டி நெய்யை அல்வாவின் மேல் ஊற்றி ஆறவைக்கவும். இப்பொழுது சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா தயார்.

மலேஷியா ஸ்பெஷல் ஜாலர் ஆப்பம்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

முட்டை - 1

தேங்காய்ப்பால் - 1 கப்

நெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மைதா மாவு, முட்டை, தேங்காய்ப்பால், உப்பு ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பதத்தில் நன்றாகக் கலக்கவும். ஜாலர் ஆப்பம் தயாரிப்பதற்கான அச்சில் இந்த மாவை ஊற்றவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும், அதன் மீது மாவை அச்சின் வழியாக ஜிலேபி பிழிவது போல கல் முழுவதும் பிழியவும். பின்பு அதன்மீது சிறிது நெய்யை ஊற்றவும்.

இதை மறுபக்கம் திருப்பிப்போட்டு வேக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது சுவையான மலேஷியா ஸ்பெஷல் ஜாலர் ஆப்பம் தயார்.

மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, முட்டை கிரேவி போன்றவை இதற்கு பொருத்தமாக இருக்கும்.

சைவப் பிரியர்கள் ஜாலர் ஆப்பத்துடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். தக்காளி, கேரட், வெங்காயம், குடைமிளகாய், வெள்ளரி ஆகிய காய்கறிகளை சுத்தம் செய்து பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். அவற்றை ஜாலர் ஆப்பத்தின் மீது பரப்பவும். அதன் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து, அதற்கு மேலாக மயோனைஸ் தடவவும். மற்றொரு ஜாலர் ஆப்பத்தைக் கொண்டு இதை மூடி அதன் மேல் தக்காளி சாஸ் ஊற்றி சுவைக்கவும்.

Tags:    

மேலும் செய்திகள்

போபா டீ