பனங்கிழங்கு ரெசிபிகள்
சுவையான பனங்கிழங்கு ரெசிபிகளின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்.;
பனங்கிழங்கு லட்டு
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 6
துருவிய தேங்காய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - ½ கப்
ஏலக்காய் - 2
செய்முறை:
பனங்கிழங்கை நன்றாக வேகவைத்து, நார் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இத னால் பனங்கிழங்கின் பிசுபிசுப்பு தன்மை நீங்கும். அரை மணி நேரம் கழித்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கிக்கொள்ளவும். அதை அகலமான பாத்திரத்தில் கொட்டவும். இப்போது பனங்கிழங்கு மாவுடன் தேங்காய்த் துருவல் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, உருண்டைகளாகப் பிடிக்கவும். சுவையான 'பனங்கிழங்கு லட்டு' தயார்.
பனங்கிழங்கு பர்பி
தேவையான பொருட்கள்:
பனங்கிழங்கு - 6
தண்ணீர் - ¼ கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 2
நெய் - தேவையான அளவு
பிஸ்தா (துருவியது) - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
பனங்கிழங்கை வேகவைத்து நார் நீக்கி, சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். இவற்றுடன் ஏலக்காய் சேர்த்து மிக்சியில் போட்டு துருவிய தேங்காய் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பனங்கிழங்கு துருவலை அதில் கொட்டி மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதனுடன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பனங்கிழங்கு துருவலுடன் சர்க்கரை சேர்ந்து கெட்டியாகும் வரை வதக்கவும். பின்பு அதில் நெய் ஊற்றி மேலும் 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.
இப்போது ஒரு தட்டில் நெய் தடவி, அதில் பனங்கிழங்கு கலவையைக் கொட்டி சமமாக்கவும். அதன் மேல் துருவிய பிஸ்தா பருப்பைத் தூவி, உங்களுக்கு விருப்பமான வடிவில் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இப்போது 'பனங்கிழங்கு பர்பி' ரெடி.